16 புதிய வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கம்
வத்தல்மலை உள்ளிட்ட 16 புதிய வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கத்தை 3 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
வத்தல்மலை உள்ளிட்ட 16 புதிய வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கத்தை 3 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
அரசு பஸ்கள் தொடக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வத்தல்மலை உள்ளிட்ட 16 புதிய வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்க தொடக்க விழா தர்மபுரி பஸ் நிலையத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார், ஜி.கே.மணி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்ரமணி, இன்பசேகரன், சப்-கலெக்டர் சித்ரா விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் பொன்முடி வரவேற்றார்.
இந்த விழாவில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் கொடியசைத்து அரசு பஸ் இயக்கத்தை தொடங்கி வைத்தனர். மேலும் வத்தல்மலை கிராமத்தை சேர்ந்த 32 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
நீண்ட நாள் கோரிக்கை
பின்னர் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களில் முதல்-அமைச்சர் வத்தல்மலைக்கு நேரில் சென்று அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்றினார். அதன் ஒரு பகுதியாக வத்தல்மலைக்கு அரசு பஸ் விடப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பஸ் சேவையை அதிகாரிகள் தொடர்ந்து முறையாக கண்காணிக்க வேண்டும். அரசு போக்குவரத்து கழகத்தில் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட ஆண்டுக்கு ரூ.1900 கோடி நிதியை அரசு வழங்கி வருகிறது. தர்மபுரி பஸ் நிலையத்தை ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று கூறினார்.
கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், போக்குவரத்து கழகங்களை அரசுடமையாக்கியவர் கருணாநிதி. தமிழகத்தில் அனைத்து துறைகளும் முழுமையாக வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் முதல்-அமைச்சர் செயல்பட்டு வருகிறார். எல்லோருக்கும் எல்லாம் என்ற பொற்கால ஆட்சி நடக்கிறது. கோரிக்கை வைக்க விட்டாலும் மக்களின் தேவையை அறிந்து இந்த அரசு நிறைவேற்றி வருகிறது என்று கூறினார்.
151 கோடி பேர் இலவச பயணம்
கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பஸ் பயணத்தை தமிழக முதல் அமைச்சர் அறிவித்தார். இது ஏழை நடுத்தர குடும்பங்களை சேர்ந்த பெண்கள் பயன் பெற்று வருகிறார்கள். இதுவரை இந்த திட்டத்தின் படி 151 கோடி பேர் அரசு பஸ்களில் இலவச பயணம் செய்துள்ளனர் என்று கூறினார்.