குறித்த நேரத்துக்கு முன்னதாக இயக்கப்படும் பஸ்கள்
கூத்தாநல்லூா் அருகே குறித்த நேரத்துக்கு முன்னதாக இயக்கப்படும் பஸ்களால் மாணவர்கள் அவதிப்படுகிறார்கள்.
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூா் அருகே குறித்த நேரத்துக்கு முன்னதாக இயக்கப்படும் பஸ்களால் மாணவர்கள் அவதிப்படுகிறார்கள்.
பஸ்கள் இயக்கம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள, வடபாதிமங்கலத்தில் பஸ் நிலையம் உள்ளது. மன்னார்குடி, திருவாரூர், எட்டுக்குடி, திருத்துறைப்பூண்டி, கோட்டூர், விக்ரபாண்டியம், கூத்தாநல்லூர், திருச்சி, தஞ்சாவூர், கொரடாச்சேரி, குடவாசல், கும்பகோணம் போன்ற வழித்தடங்களில் சென்று வரக்கூடிய பஸ்கள் அனைத்தும், வடபாதிமங்கலம் பஸ் நிலையத்தில் நிறுத்தி, வழக்கமான நேரங்களிலேயே இயக்கப்படுகின்றன.
1 மணி நேரத்துக்கு முன்பாக...
இந்த நிலையில் சில குறிப்பிட்ட வழித்தடங்களில் சாலை பராமரிப்பு மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால் இறுதி வரை செல்ல வேண்டிய ஊர்களுக்குச் செல்ல முடியாமல், பஸ்கள் இடையில் உள்ள தூரத்திலேயே திருப்பப்படுகின்றன. இவ்வாறு திருப்பப்படும் பஸ்கள் வழக்கமான நேரத்தை காட்டிலும் ½மணி நேரம் அல்லது 1 மணி நேரத்துக்கு முன்பாகவே சென்று விடுகிறது.
மாணவர்கள் தவிப்பு
இதனால், வழக்கமான நேரத்தில் பஸ் நிறுத்தம் உள்ள இடங்களுக்கு வரும் பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிரமம் அடைகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் வேலைக்கு செல்வோர் முன் கூட்டியே பஸ் சென்று விடுவதால் செய்தறியாது திகைத்து நிற்கிறார்கள். அதன்பிறகு, மாற்று ஏற்பாடு செய்து செல்வதற்குள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.எனவே தவிர்க்க முடியாத காரணங்களால் பாதியிலேயே திருப்பப்படும் பஸ்கள் முன்கூட்டியே செல்லாதவாறு வடபாதிமங்கலம் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்து, வழக்கமான நேரம் வந்த பிறகே பஸ்களை இயக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.