ஆந்திரா செல்லும் பஸ்கள் வேலூரில் நிறுத்தம்-திருப்பதி பக்தர்கள் கடும் அவதி
சித்தூர் மாவட்டத்தில் நடந்த முழு அடைப்பு காரணமாக தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலம் செல்லும் அரசு, தனியார் பஸ்கள் வேலூரில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் மற்றும் திருப்பதி பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
சித்தூர் மாவட்டத்தில் நடந்த முழு அடைப்பு காரணமாக தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலம் செல்லும் அரசு, தனியார் பஸ்கள் வேலூரில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் மற்றும் திருப்பதி பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
சித்தூரில் கடையடைப்பு
ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவருமான சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூர் பகுதியில் நேற்று முன்தினம் ஆந்திர அரசின் நீர்ப்பாசன மேலாண்மை திட்டப்பணிகளை பார்வையிட சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
புங்கனூர் பகுதிக்கு வரவிடாமல் சந்திரபாபு நாயுடுவை தடுத்து நிறுத்துவதற்காக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் அன்னமய மாவட்டம் குரபலக்கோட்டாவில் காத்திருந்தனர். அங்கு தெலுங்கு தேசம் கட்சியினரும் குவிந்தனர்.
அப்போது அவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. பின்னர் கலவரமாக மாறியது. இருகட்சியினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டினர். இந்த சம்பவத்தை கண்டித்து ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் சார்பில் சித்தூர் மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
வேலூரில் பஸ்கள் நிறுத்தம்
இதன்காரணமாக வேலூர் மாவட்டத்தில் இருந்து நேற்று அதிகாலை முதல் சித்தூர், திருப்பதி உள்ளிட்ட ஆந்திர மாநிலங்களுக்கு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநிலம் மற்றும் திருப்பதி, காளஹஸ்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சித்தூர் மாவட்டத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.
சித்தூர் மாவட்டத்தில் பந்த் என்பதால் வேலூர் வழியாக ஆந்திரா, சித்தூர் வழியாக கர்நாடகா மாநிலங்களுக்கு எவ்வித வாகனங்களும் செல்லவில்லை.
வேலூர், விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஆரணி உள்ளிட்ட இடங்களில் இருந்து திருப்பதி மற்றும் காளஹஸ்திக்கு இயக்கப்படும் தமிழக அரசு மற்றும் தனியார் பஸ்கள் வேலூர் புதிய பஸ்நிலையத்தில் நிறுத்தப்பட்டன. அதேபோன்று வேலூரில் இருந்து சித்தூர் மாவட்டம் வழியாக கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் பஸ்களும் இயக்கப்படவில்லை.
ரெயிலில் பயணம்
இதேபோல் திருப்பதி, காளஹஸ்தி, சித்தூர் உள்ளிட்ட ஆந்திர மாநிலங்களில் இருந்து வேலூருக்கு இயக்கப்படும் 56 ஆந்திர மாநில பஸ்களும் இயங்கவில்லை. முழு அடைப்பு காரணமாக வேலூர் வழியாக திருப்பதிக்கு செல்வதற்கு வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
பெரும்பாலான பயணிகள் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்சில் காட்பாடிக்கு சென்று அங்கிருந்து ரெயில் மூலம் திருப்பதிக்கு சென்றனர். காட்பாடி வழியாக ஆந்திர மாநிலம் சென்ற ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் அனைவரும் முண்டியடித்து ஏறி கூட்ட நெரிசலில் பயணித்தனர்.
இதேபோன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த தமிழக பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். ஆந்திர-தமிழக மாநில எல்லை பகுதிகளில் வசிக்கும் ஆந்திர மாநில மக்கள் அத்தியாவசிய தேவைக்காக நடந்தே தமிழக எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டைக்கு வந்தனர். அங்கிருந்து இயக்கப்பட்ட ஆட்டோவில் அவர்கள் ஏறி வேலூருக்கு வந்தனர்.
இதற்கிடையே வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு மாலை 4.30 மணி முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
மாலையில் பஸ்கள் இயக்கம்
இதுகுறித்து வேலூர் மண்டல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், ''சித்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற முழு அடைப்பு காரணமாக வேலூர் மண்டலத்தில் இருந்து திருப்பதிக்கு செல்லும் 10 பஸ்கள் மற்றும் கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் 4 பஸ்கள் இயக்கப்படவில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு இயக்கப்படும் 40 அரசு பஸ்கள் வேலூர் புதிய பஸ்நிலையத்தில் நிறுத்தப்பட்டன.
சித்தூர் மாவட்டத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை. நிலைமை கட்டுக்குள் உள்ளதால் பஸ்கள் இயக்கலாம் என்று ஆந்திர மாநில போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பேரில் மாலை 4.30 மணி முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்தனர்.