அம்மையநாயக்கனூர் ஊருக்குள் வராத பஸ்கள்


அம்மையநாயக்கனூர் ஊருக்குள் வராத பஸ்கள்
x

நான்கு வழிச்சாலையில் பயணிப்பதால் அம்மையநாயக்கனூர் ஊருக்குள் பஸ்கள் வருவதில்லை. இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல், மதுரையில் இருந்து இயக்கப்படுகிற பெரும்பாலான பஸ்கள் கொடைரோடு, அம்மையநாயக்கனூர் ஊருக்குள் செல்வதில்லை. குறிப்பாக திண்டுக்கல்- மதுரை நான்கு வழிச்சாலை வழியாகவே சென்று வருகின்றன. இதனால் கொடைரோடு, அம்மையநாயக்கனூருக்கு வந்து செல்லும் பஸ்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது. அதிலும் இரவு 10 மணிக்கு மேல் கொடைரோட்டுக்கு பஸ்கள் வருவது கிடையாது.

நான்கு வழிச்சாலையில் உள்ள கொடைரோடு சுங்கச்சாவடியிலேயே பயணிகளை இறக்கி விடும் அவலநிலை நீடித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், திண்டுக்கல் வட்டார போக்குவரத்துறை அலுவலர் சுரேஷ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இளங்கோ, ஸ்ரீதர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

அம்மையநாயக்கனூர் பஸ் நிறுத்தத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் ஊருக்குள் செல்லாமல் நான்குவழிச்சாலையில் சென்ற பஸ்களை மறித்தனர். பின்னர் அந்த பஸ்களை ஊருக்குள் திருப்பி விட்டனர். மேலும் அம்மையநாயக்கனூர், கொடைரோடு ஊருக்குள் சென்று வர பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு அவர்கள் உத்தரவிட்டனர். மேலும் இனி வருங்காலத்தில் ஊருக்குள் சென்று வராத பஸ் டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story