வேலூரில் இருந்து சென்னைக்கு குறைந்த அளவே பஸ்கள் இயக்கம்
பயணிகள் வரத்து குறைவால் வேலூரில் இருந்து சென்னைக்கு குறைந்த பஸ்களே இயக்கப்பட்டன.
பயணிகள் வரத்து குறைவால் வேலூரில் இருந்து சென்னைக்கு குறைந்த பஸ்களே இயக்கப்பட்டன.
குறைந்த பஸ்கள் இயக்கம்
தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் இடைவிடாது மழை பெய்தது.
இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் வார இறுதிநாட்களில் சென்னைக்கு செல்வார்கள். மேலும் வேலூரை சேர்ந்தவர்கள் பலர் சென்னையில் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு செல்பவர்கள் பெரும்பாலானவர்கள் அரசு பஸ் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் மாண்டஸ் புயலால் பெய்த மழையின் காரணமாக வழக்கமான நாட்களில் இயக்கப்படும் பஸ்களை விட நேற்று குறைந்த பஸ்களே இயக்கப்பட்டன.
எனினும் வேலூரில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து வேலூருக்கும் குறைந்த அளவிலான பயணிகளே பயணம் மேற்கொண்டனர்.
ஏ.சி.பஸ்கள்
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ''மழை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் சென்னை செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது. தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கி வருகிறோம்.
பெரும்பாலான ஏ.சி.பஸ்கள் சென்னைக்கு இயக்கவில்லை. காஞ்சீபுரத்தை அடுத்து தாம்பரம் செல்லும் சாலையில் மழையால் சாலை துண்டிக்கப்பட்டது. எனவே வேலூரில் இருந்து தாம்பரம் செல்லும் பஸ்கள் காஞ்சீபுரம் வரை மட்டுமே இயக்கப்பட்டது''என்றனர்.