தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் மீண்டும் வந்து செல்லும் பஸ்கள்


தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் மீண்டும் வந்து செல்லும் பஸ்கள்
x

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் மீண்டும் வந்து செல்லும் பஸ்கள்

தஞ்சாவூர்

கொரோனாவுக்கு முன்பு இருந்தது போல் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் மீண்டும் பஸ்கள் வந்து செல்கின்றன. கோரிக்கை நிறைவேறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இங்கு ஏராளமான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

கொரோனா தொற்று அதிகரித்து வந்த காலக்கட்டத்தில் மற்ற நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. தற்போது மற்ற நோய்க்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

நுழைவு வாசல்கள்

இந்த ஆஸ்பத்திரிக்கு 4 இடங்களில் நுழைவு வாசல்கள் உள்ளன. இதில் முதல் வாசல் வழியாக மருத்துவக்கல்லூரிக்கும், ஆஸ்பத்திரிக்கும் செல்லலாம். மேலும் ஆஸ்பத்திரி வளாகத்தின் உள்ளேயே பஸ் நிறுத்தமும் உள்ளது.கொரோனாவுக்கு முன்னர் ஆஸ்பத்திரியின் 2-வது நுழைவு வாசல் வழியாக பஸ்கள் உள்ளே சென்று 4-வது வாசல் வழியாக வெளியே சென்று கொண்டிருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் பயனடைந்து வந்தனர்.இந்த நிலையில் கொரோனா தொற்று, ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால்ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் பஸ்கள் உள்ளே சென்று வருவது இல்லை. மாறாக பயணிகளை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வெளியே சாலையிலேயே இறக்கி விட்டு, ஏற்றி சென்றன.

மீண்டும் வந்து செல்லும் பஸ்கள்

பஸ்கள் சாலையோரத்தில் நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்திகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சிரமப்பட்டுவந்தனர். மேலும் திறந்த வெளியில் நின்று பஸ்சுக்காக பொதுமக்கள் காத்திருக்கவேண்டிய நிலை இருந்தது.

குறிப்பாக மழை மற்றும் வெயில் காலங்களில் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்து பஸ்கள் பொதுமக்களை ஏற்றி இறக்கி செல்கின்றன.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆஸ்பத்திரியின் வெளியே சாலையோரத்தில் பஸ்கள் நின்று செல்வதால் சிரமப்பட்டு வந்தோம். மழை வெயில் காலங்களில் பல்வேறு இன்னல்களை சந்தித்தோம்.

மேலும் பஸ்நிறுத்தத்தில் இருந்து ஆஸ்பத்திரிக்கு நடந்து சென்று சிகிச்சை பெற்று வந்ததால் முதியவர்கள், நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தோம். கொரோனாவுக்கு பிறகு மீண்டும் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் பஸ்கள் வந்து செல்வதுமகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.


Related Tags :
Next Story