காங்கிரஸ் கட்சியினர் பஸ்களை சிறைபிடித்ததால் பரபரப்பு


காங்கிரஸ் கட்சியினர் பஸ்களை சிறைபிடித்ததால் பரபரப்பு
x

விராலிமலை சோதனைச்சாவடி அருகே காங்கிரஸ் கட்சியினர் பஸ்களை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதனை கண்டித்து புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சிறிது நேர போராட்டத்திற்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதேபோல் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் வட்டார நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விராலிமலை சோதனைச்சாவடி அருகே மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஏழுமலை தலைமையிலான நிர்வாகிகள் அவ்வழியே வந்த பஸ்களை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலங்குடி வடகாடு முக்கம் பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் ராம சுப்புராம் தலைமையிலான நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொன்னமராவதி அண்ணா சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து அரசு பஸ்களை தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.


Next Story