நாளை பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர் உறுதி
நிதிநிலை தற்போதுள்ள சூழலில் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
சென்னை,
போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளன.
இதையடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையரகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோ, மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் ஆகியோர் பங்கேற்றனர்.
தொழிற்சங்கங்கள் தரப்பில் சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவையை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்த நிலையில் நாளை பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, "தொமுச உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் நாளை பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர் அதனால் பேருந்துகள் உறுதியாக இயங்கும். 2 கோரிக்கைகளை ஏற்பதாக ஏற்கனவே போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
2 கோரிக்கைகளை ஏற்பதாக உறுதியளிக்கப்பட்டதால், பொங்கலுக்கு பிறகு மற்றவை குறித்து முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிநிலை தற்போதுள்ள சூழலில் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது" என்று கூறினார்.