புதர்களை வெட்டி அகற்றும் பணி மும்முரம்


புதர்களை வெட்டி அகற்றும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 27 Sep 2022 6:45 PM GMT (Updated: 27 Sep 2022 6:45 PM GMT)

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் புதர்களை வெட்டி அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் புதர்களை வெட்டி அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

சாலை விரிவாக்கம்

கோத்தகிரி நெடுஞ்சாலைத் துறை சார்பில், வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் டானிங்டன் முதல் கைத்தளா வரையுள்ள பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள 3 இடங்களில் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது.

அங்கு மண்சரிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில், 20 மீட்டர், 46 மீட்டர், 62 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுவர்கள் கட்டி முடிக்கப்பட்டு, சாலை விரிவாக்கம் செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது. மேலும் கோத்தகிரி பகுதியில் தொடர் மழை காரணமாக சாலையோரங்களில் புதர்கள், செடிகள் அடர்ந்து வளர்ந்து இருந்தன. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை இருந்தது. இதையடுத்து கோத்தகிரியில் இருந்து குஞ்சப்பனை வரை சாலையின் இருபுறங்களிலும் வளர்ந்துள்ள புதர் செடிகளை எந்திரம் மூலம் வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

மண்சரிவு

இதுகுறித்து கோத்தகிரி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் சாமியப்பன், உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் கூறும்போது, கோத்தகிரியில் பருவமழை பெய்யும் போது பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபடுகிறது. இதை தடுக்கும் வகையில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி, தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்து உள்ளன. கன்னேரிமுக்கு செல்லும் சாலையில் தடுப்புச்சுவர் கட்டும் பணி விரைவில் முடிவடையும்.

பணிக்காக போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்த அந்த சாலையில் தற்போது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மழைநீர் வழிந்தோடி சாலைகள் சேதமடையாமல் தடுக்க வேண்டி, சாலையின் இருபுறமும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, மழைநீர் கால்வாய்கள் புதுப்பிக்கும் பணி, கால்வாய் அடைப்புகளை நீக்கும் பணி உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றனர்.


Next Story