ரூ.75 லட்சம் மானியத்துடன் கூடிய தொழில் கடன்
புதிய தொழில் முனைவோர் தொழில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மானியத்துடன் கூடிய தொழில் கடன் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்படவும், முதல் தலைமுறையினர் தொழில் தொடங்க புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சுய தொழில்
இ்ந்த திட்டத்தின் மூலம் பிளஸ்-2 தேர்ச்சி மற்றும் பட்டய தொழிற்கல்வி தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறையினர் சுயமாக தொழில் தொடங்க வசதி செய்யப்பட்டுள்ளது. பொது பிரிவினர் 21-க்கு மேல் 35-வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினரான மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும்.
பயனாளிகள் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் அனைத்து உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை கடன் பெற்று அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
நேர்முகத்தேர்வு
மேலும் இத்திட்டத்தின் கீழ் பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி தொழில் முனைவோருக்கு கூடுதலாக மானியம் ரூ. 10 லட்சம் வழங்கப்படும். இத்திட்டத்தில் அரிசி ஆலை, மர இழைப்பகம், மாவு மில், எண்ணெய் அரைக்கும் ஆலை, சி.என்.சி. லேத், அட்டைப்பட்டி தயாரித்தல், பிரிண்டிங் எந்திரங்கள். பேப்பர் போர்டு. பேண்டேஜ் கிளாத் தயாரித்தல், நடமாடும் உணவகம், கடலை மிட்டாய் தயாரித்தல், கால்நடை தீவனம் தயாரித்தல், பவர் லாண்டரி, ஸ்கேன் சென்டர், ஜிம் சென்டர், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, ஸ்டீல் கட்டில் பீரோ மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்கலாம்.
ஆன்லைன்முறையில் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நேர்முக தேர்வின் மூலம் தகுதியின் அடிப்படையில் வங்கிக்கு பரிந்துரைக்கப்படும். திட்ட முதலீட்டில் பொதுப்பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் முதலீடு செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்கலாம்
கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோருக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீத பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இணையதள முகவரியில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், விருதுநகர் 89255 34036 என்ற செல்போனில தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் மேகநாத ரெட்டி கூறினார்.