தொழில் வரி விவகாரம்: மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. வாக்குவாதம்-கவுன்சிலர்கள் வெளிநடப்பால் பரபரப்பு


தொழில் வரி விவகாரம்: மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. வாக்குவாதம்-கவுன்சிலர்கள் வெளிநடப்பால் பரபரப்பு
x

சேலம் மாநகராட்சி கூட்டத்தில், தொழில் வரி விதிப்பு குறித்த விவாதத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வெளிநடப்பு செய்த அ.தி.மு.க. கவுன்சிலர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

மாநகராட்சி கூட்டம்

சேலம் மாநகராட்சி கூட்டம் மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் பாலச்சந்தர், துணை மேயர் சாரதாதேவி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர், துணை மேயர், கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மேயர் ராமச்சந்திரன் வாசித்து அதை நிறைவேற்றினார்.

பின்னர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி, மாநகராட்சியில் தொழில் வரி அதிகம் விதிக்கப்பட்டு உள்ளது. அதை குறைக்க வேண்டும் என்று கூறினார். அப்போது தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது யாதவமூர்த்தி நிருபர்களிடம் கூறும் போது,'சிறு,குறு,நடுத்தர, பெரிய தொழில் நிறுவனங்கள் என 4 வகைகளில் தொழில் வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் முடி திருத்துபவர் உள்பட அனைவருக்கும் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத அளவில் தொழில் வரி அதிகம் விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே உயர்த்தப்பட்ட தொழில் வரி முழுவதும் நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வெளிநடப்பு செய்து உள்ளோம்' என்றார்.

அபராதம் விதிக்க வேண்டும்

தொடர்ந்து கூட்டத்தில், பொது சுகாதார குழு தலைவர் சரவணன் பேசும் போது,'மாநகராட்சி பகுதியில் வார்டுக்கு ஒரு சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருகிறது. தமிழக அரசு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வார்டு பகுதிகளுக்கு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்த பெருமையை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு மனம் இல்லை. இதனால் வெளி நடப்பு செய்கின்றனர். எனவே மேயர், ஆணையாளர் ஆகியோர் எதிர்க்கட்சி கவுன்சிலர்களை அழைத்து பேச வேண்டும்' என்றார்.

கவுன்சிலர் தெய்வலிங்கம் பேசும் போது, 'அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் செயற்பொறியாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாக்கடை கால்வாய் அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

கவுன்சிலர் சாந்தமூர்த்தி கூறும் போது, 'சிறந்த மாநகராட்சி என்று நாம் பரிசு பெற்றுள்ளோம். மேயரும், ஆணையாளரும் சிறப்பாக பணியை மேற்கொண்டு வருகின்றனர். எனவே வருவாயை பெருக்கி தொடர்ந்து சிறந்த மாநகராட்சி என்ற அந்தஸ்த்தை தக்க வைக்க அனைவரும் பாடுபட வேண்டும்' என்றார்.

கவுன்சிலர் ஈசன் இளங்கோவன் பேசும் போது, 'அம்மாபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும். சாலையில் குப்பைகள் போடுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்' என்றார்.

முதல்-அமைச்சருக்கு நன்றி

காங்கிரஸ் கவுன்சிலர் கிரிஜா குமரேசன் கூறும் போது,'கவுன்சிலர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.

முன்னதாக மாநகராட்சி ஊழியர்கள், கவுன்சிலர்களுக்கு புதிய 100 ரூபாய் நோட்டுக்களை மதிப்பூதியமாக வழங்கினர். அதை பெற்றுக்கொண்ட கவுன்சிலர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டனர்.


Next Story