கழிவறையில் பிணமாக கிடந்த தொழில் அதிபர்
கோவையில் கழிவறையில் பிணமாக கிடந்த தொழில் அதிபரின் உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணபதி
கோவையில் கழிவறையில் பிணமாக கிடந்த தொழில் அதிபரின் உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழில் அதிபர்
கோவை ரத்தினபுரி லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 56). தொழில் அதிபர். இவர் செக்கான்தோட்டம் பகுதியில் ஐஸ்கிரீம் தயாரிக்க பயன்படும் எந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். இவருடைய மனைவி மெர்லின். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மெர்லின் கடந்த 6 மாதமாக கணவரை பிரிந்து பெங்களூருவில் வசித்து வருகிறார். இதனால் குமார் தனது நிறுவனத்தின் அருகே அறை எடுத்து தங்கி இருந்தார்.
துர்நாற்றம் வீசியது
அவருடைய அறைக்கு நேற்றுமுன்தினம் ஊழியர் சென்றார். அப்போது அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அவர், வெகுநேரமாக தட்டியும் கதவு திறக்கப்பட வில்லை. ஆனால் அறையின் அருகே இருந்து துர்நாற்றம் வீசியது.
இது குறித்து அவர், ரத்தினபுரி போலீசார் மற்றும் மெர்லினுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அழுகிய நிலையில் பிணம்
அப்போது அங்குள்ள கழிவறையில் உடல் அழுகியநிலையில் குமார் பிணமாக கிடந்தார். இவர் இறந்து 2 நாட்கள் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கழிவறை சென்றபோது குமார் தவறி கீழே விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.