ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.90 லட்சத்தை இழந்த தொழிலதிபர் தற்கொலை
கோவையில் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.90 லட்சத்தை இழந்த கார் டீலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆன்லைன் சூதாட்டம்
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஏராளமானோர் தற்கொலை செய்து வந்தனர். கோவை மாவட்டத்தில் மட்டும் ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 6 பேர் தற்கொலை செய்தனர்.
இதனால் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு கவர்னரும் ஒப்புதல் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தை எவ்வாறு தடை செய்வது? என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸ் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
ஐ.பி.எல். கிரிக்கெட்
தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதனை பயன்படுத்தி ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்ட கும்பல் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறது. ஒவ்வொருநாள் நடைபெறும் போட்டியில், சம்பந்தப்பட்ட கிரிக்கெட் அணிகளை குறிப்பிட்டு, அவற்றின் மீது பணம் கட்டினால் வெற்றி பெறும்போது, ரூ.5 ஆயிரம் போனசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கின்றனர்.
மேலும் 2-ம் பரிசை வென்றால் ரூ.1 கோடி வரை கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறுகிறார்கள். இதை நம்பி அந்த கும்பல் அனுப்பும் குறிப்பிட்ட இணையதள முகவரிக்கு சென்று, பணத்தை கட்டி, அது திரும்ப கிடைக்காமல் பலரும் இழந்து வருகிறார்கள்.
கார் டீலர்
அதுபோன்று, தற்போது கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த கார் டீலர் ஒருவர், ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சப்பட்டை கிழவன் புதூரை சேர்ந்த சபாநாயகம்(வயது 35), கார் டீலராக இருந்தார். இவர் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இது தவிர பல்வேறு வகையான பிற ஆன்லைன் சூதாட்டங்களிலும் ஈடுபட்டார். இதற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார்.
ஆனால் கடந்த சில நாட்களில், அந்த ஆன்லைன் சூதாட்டங்களில் லட்சக்கணக்கில் அவர் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. பணத்தை இழந்ததால் சபாநாயகம் மன வேதனை அடைந்து காணப்பட்டார். மேலும் கடன் கொடுத்தவர்களும் பணத்தை திரும்ப கேட்க தொடங்கினர். இது தவிர அவரிடம் இருந்த 2 கார்களையும் கடன் கொடுத்தவர்கள் பிடுங்கி வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தார்.
பிணமாக கிடந்தார்
இந்த நிலையில் சபாநாயகம் பொள்ளாச்சியில் இருந்து காரில் புறப்பட்டு கோவைக்கு வந்தார். பின்னர் காந்திபுரம் 7-வது வீதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு சென்றார். அங்கு அறை எடுத்து தங்கி இருந்தார். ஆனால் அறைக்கு சென்ற சபாநாயகம் அதன் பின்னர் அறையை விட்டு வெளியே வரவில்லை. மேலும் அவரது அறை உள்பக்கமாக பூட்டப்பட்டே கிடந்தது.
இதனால் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகத்தின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவரது செல்போன் 'சுவிட்ச்-ஆப்' செய்யப்பட்டு இருந்தது. இதனால் ஓட்டல் ஊழியர்களுக்கு மீண்டும் சந்தேகம் வலுத்தது. இதையடுத்து ஊழியர்கள் சபாநாயகம் தங்கி இருந்த அறைக்கு சென்று கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து மாற்று சாவியை எடுத்து கொண்டு சென்று கதவை திறந்து பார்த்தனர். அங்கு குளியல் அறை அருகே வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தார்.
கடிதம் சிக்கியது
இதை பார்த்ததும் அதிர்ச்சியான ஓட்டல் ஊழியர்கள், இது குறித்து ரத்தினபுரி போலீசார் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் சபாநாயகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள். அதில் 'ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.90 லட்சத்தை இழந்துள்ளேன். எனது சாவுக்கு நானே காரணம். என்னுடைய தாய்-தந்தையை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். என்னுடைய தங்கை, மைத்துனர் என்னை மன்னித்துவிடுங்கள்' என்று எழுதப்பட்டு இருந்தது.
இரட்டிப்பாக பணம்
இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சபாநாயகம் ஆன்லைன் மூலமாக கிரிக்கெட் சூதாட்டத்தில் விளையாடியதும், அதன் மூலம் ரூ.90 லட்சம் வரை பணத்தை இழந்ததும் தெரியவந்தது. இந்த மன வேதனையிலேயே அவர் தென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருக வண்டை கொல்ல பயன்படுத்தும் 'செல்போஸ்" என்ற விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.