பெண் ஊழியரை எரித்து கொன்றதாக தொழில் அதிபர், மனைவி மீது வழக்கு


பெண் ஊழியரை எரித்து கொன்றதாக தொழில் அதிபர், மனைவி மீது வழக்கு
x

பெண் ஊழியரை எரித்து கொலை செய்ததாக தொழில் அதிபர், அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களை கைது செய்யக் கோரி போராட்டம் நடந்தது

கோயம்புத்தூர்

கோவை

பெண் ஊழியரை எரித்து கொலை செய்ததாக தொழில் அதிபர், அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களை கைது செய்யக் கோரி போராட்டம் நடந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

பெண் ஊழியர்

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்தவர் 37 வயது பெண், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

அவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் சிமெண்ட் கடையில் வேலை பார்த்து வந்தார். அந்த கடையை கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த தொழில் அதிபர் நவநீதன் நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று அந்த பெண் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதன் வீட்டிற்கு வந்தார். அவர், நவநீதன் மற்றும் அவரது மனைவியிடம் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவ செலவிற்கு பணம் வேண்டும் என்று கேட்டு உள்ளார்.

அவர்கள் பணம் தர மறுத்ததால் அந்த பெண் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

வாக்குமூலம்

இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த அந்த பெண், கோவை போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கணவரை பிரிந்த வாழ்ந்த எனக்கும், நவநீதனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து பலமுறை பலாத்காரம் செய்தார்.

இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன். இதை அறிந்த நவநீதன், கர்ப்பத்தை கலைக்கும்படி கூறினார். நான் அந்த கர்ப்பத்தை கலைத்தேன். இதேபோல் 6 முறை கர்ப்பத்தை கலைத்து உள்ளேன். இது அவரது மனைவிக்கும் தெரியும்.

கொலை வழக்காக மாற்றம்

அடிக்கடி கர்ப்பம் கலைந்ததால் எனது உடல் நிலை கடுமை யாக பாதிக்கப்பட்டது. எனவே எனது மருத்துவ செலவிற்கு பணம் கேட்டு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதன் வீட்டிற்கு வந்தேன்.

அப்போது அவர்கள் எனக்கு பணம் தர மறுத்ததுடன், குளியல் அறைக்கு அழைத்து சென்று என் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் அந்த பெண், தனது மரணத்திற்கு யார் காரணம் என்று பேசிய வீடியோக்கள் மற்றும் கடிதம் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

முதலில் அந்த பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த பெண் இறந்த நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அதை கொலை வழக்காக போலீசார் மாற்றினர்.

போராட்டம்

இதையடுத்து தொழில் அதிபர் நவநீதன், அவரது மனைவி அகிலா ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் அவர்கள் 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். இதற்கிடையே தொழில் அதிபர் மற்றும் அவரது மனைவியை கைது செய்யக்கோரி, இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.


Next Story