நம்பியூர் தாலுகா அலுவலகத்தில் பரபரப்புகிராம நிர்வாக அலுவலர்கள்- உதவியாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்


நம்பியூர் தாலுகா அலுவலகத்தில் பரபரப்புகிராம நிர்வாக அலுவலர்கள்- உதவியாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்
x

உள்ளிருப்பு போராட்டம்

ஈரோடு

நம்பியூர் தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பள பட்டியல்

நம்பியூர் தாலுகா அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், நம்பியூர், வேமாண்டாம்பாளையம், எலத்தூர் என 3 உள்வட்டங்களில் 26 வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்கு 26 கிராம நிர்வாக அலுவலர்களும், 9 கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். மேலும் கடந்த ஜனவரி மாதம் புதியதாக 5 கிராம நிர்வாக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து பிரேமா என்பவர் கடந்த ஜனவரி மாதம் வேமாண்டம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அவர் பொறுப்பேற்ற பின்னர் சம்பள பட்டியலை நம்பியூர் தாலுகா அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் இறுதியில் வழங்கி உள்ளார். ஆனால் 40 நாட்களை கடந்தும், தாலுகா அலுவலகத்தில் சம்பள பட்டியல் தயாரிக்கும் இளநிலை உதவியாளர் ஒருவர் பிரேமாவுக்கான சம்பள பட்டியலை தயார் செய்து தாசில்தாாிடம் ஒப்புதல் பெறாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

உள்ளிருப்பு போராட்டம்

கடந்த 3 மாதங்களாக பிரேமா சம்பளம் பெறமுடியாத நிலை ஏற்பட்டது. இதேபோல் இங்கு பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் பலருக்கும் பல்வேறு வகையான பணப்பலன்களை வழங்க அந்த இளநிலை உதவியாளர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. மேலும் கடந்த ஜனவரி மாதம் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட 5 கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்களை, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களில் பணி செய்ய விடாமல், தாலுகா அலுவலகத்திலேயே மாற்று பணி செய்ய வைத்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் நம்பியூர் தாலுகா அலுவலகத்துக்கு 25 கிராம நிர்வாக அலுவலர்கள், 14 உதவியாளர்கள் ஒன்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி, கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் சங்க மாநில தலைவர் ராஜசேகர் ஆகியோர் தலைமையில் அலுவலகத்தின் உள்ளே உட்கார்ந்து திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

நம்பியூர் தாலுகாவுக்கு உள்பட்ட பகுதியில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிா்வாக உதவியாளர்கள் அனைவருக்கும் பணியிட மாறுதல் வழங்கக்கோரும் மனுவுடன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் தாசில்தார் பெரியசாமி, விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தாசில்தார் பெரியசாமி கூறுகையில், 'விடுபட்டவர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைவருக்கும் உடனடியாக பணப்பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக நியமிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்களை, கிராமங்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை தரம் பிரிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். இனி அந்தந்த கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்களை பணியாற்ற அனுப்பி வைப்பதாகவும்,' தெரிவித்தார். இதில் சமாதானம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் நம்பியூர் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story