தேனி அல்லிநகரத்தில் பரபரப்பு:குழந்தைகளுடன் பெற்றோர் சாலை மறியல்:அரசு பள்ளியை கண்டித்து போராட்டம்


தேனி அல்லிநகரத்தில் பரபரப்பு:குழந்தைகளுடன் பெற்றோர் சாலை மறியல்:அரசு பள்ளியை கண்டித்து போராட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி அல்லிநகரத்தில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க மறுப்பதாக கூறி பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேனி

முற்றுகை-சாலை மறியல்

தேனி அல்லிநகரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு பெற்றோர்கள் சிலர் தங்களின் குழந்தைகளுடன் நேற்று வந்தனர். பள்ளியில் மாணவ, மாணவிகளை சேர்க்க மறுப்பதாகவும், ஏற்கனவே சேர்ந்து படித்து 3-ம் வகுப்பு வரை படித்த மாணவ, மாணவிகளை வேறு பள்ளியில் சேர்க்குமாறு வற்புறுத்துவதாக கூறியும் பள்ளியை அவர்கள் முற்றுகையிட்டனர்.

சுமார் அரை மணி நேரம் முற்றுகையிட்ட நிலையில் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பெரியகுளம் சாலைக்கு நடந்து சென்றனர். அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்ததும் அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். மறியல் செய்த மக்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மக்கள் மறியலை கைவிட்டனர்.

மறியல் செய்தவர்கள் கூறும்போது, 'கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி ஆசிரியர்கள் வீதி, வீதியாக வந்து பிரசாரம் செய்ததால் எங்கள் குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்த்தோம். 1 முதல் 3-ம் வகுப்பு வரை 70 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு முழுவதும் 6-ம் வகுப்பில் இருந்து மட்டுமே பள்ளி செயல்படும் என்றும், எங்கள் குழந்தைகளின் மாற்றுச்சான்றிதழை வாங்கி வேறு பள்ளியில் சேர்க்குமாறும் சொல்கிறார்கள். மேலும், பிற பள்ளிகளில் இருந்து இங்கு கொண்டு வந்து சேர்க்கும் மாணவர்களை சேர்க்கவும் மறுக்கின்றனர்' என்றனர்.

பெற்றோருக்கு விளக்கம்

தலைமை ஆசிரியர் கருப்பையன் அங்கு வந்து, தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் அனுப்பிய உத்தரவு நகலை போலீசாரிடம் காண்பித்தார். அதில், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிகளில் மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் அருகே உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர்களை கொண்டு பயிற்றுவிக்கும் வகையில் மாதிரி பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளை துணை வளாகமாக செயல்படுத்துவது தொடர்பான உத்தரவுகள் இடம் பெற்றிருந்தன. அது குறித்து மக்களிடம் போலீசார் விரிவாக எடுத்துக் கூறினர்.

அதை ஏற்றுக் கொண்ட பெற்றோர்கள், மாணவர் சேர்க்கையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். மாணவர்களை சேர்த்துக் கொள்வதாக தலைமை ஆசிரியர் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story