தூத்துக்குடியில் பரபரப்பு; விபத்தில் இறந்தவர் உடலை வாங்கமறுத்து உறவினர்கள் போராட்டம்


தூத்துக்குடியில் பரபரப்பு; விபத்தில் இறந்தவர் உடலை வாங்கமறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 27 May 2023 6:45 PM GMT (Updated: 27 May 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் விபத்தில் இறந்தவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்து தொடர்பாக போலீசார் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று அவர்கள் புகார் தெரிவித்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் விபத்தில் இறந்தவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்து தொடர்பாக போலீசார் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று அவர்கள் புகார் தெரிவித்தனர்.

விபத்தில் லாரி டிரைவர் பலி

தூத்துக்குடி அருகே உள்ள அய்யனார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமணி, லாரி டிரைவர். இவர் கடந்த 24-ந்தேதி இரவு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். குளத்தூர் அருகே உள்ள பனையூர் பகுதியில் சென்றபோது, அந்த வழியாக நடந்து வந்த வரதராஜன் என்பவர் மீது இவரது மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சுடலைமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

உறவினர்கள் போராட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுடலைமணியின் உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சியினர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் திடீரென திரண்டு, சுடலைமணியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், சுடலைமணி காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது போலீசார் முறையாக தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும், இறந்த பின்னரே தகவல் தெரிவித்தனர் என்றும் புகார் கூறினர். சுடலைமணியின் குடும்பத்துக்கு உரிய தகவல் தராத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சுடலைமணியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பேச்சுவார்த்தை

உடனே நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், தாசில்தார் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து பேச்சுவார்த்ைத நடந்தது.

விபத்தில் இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் போராட்டம் நடத்திய சம்பவத்தால் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story