பெரியகுளம் அருகே பரபரப்பு: மின்வேலியில் சிக்கிய சிறுத்தை வனத்துறை அதிகாரி மீது பாய்ந்து தாக்கியது


பெரியகுளம் அருகே பரபரப்பு:  மின்வேலியில் சிக்கிய சிறுத்தை   வனத்துறை அதிகாரி மீது பாய்ந்து தாக்கியது
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே மின்வேலியில் சிக்கிய சிறுத்தை வனத்துறை அதிகாரி மீது பாய்ந்து தாக்கியது.

தேனி

வேலியில் சிக்கிய சிறுத்தை

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த கைலாசநாதர் மலைக்கோவில் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தாமல் தடுக்க வனத்துறை சார்பில் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்வேலியில் இன்று காலை ஒரு சிறுத்தை சிக்கிக் கொண்டது. அந்த வழியாக ரோந்து சென்ற வனத்துறை ஊழியர்கள் இதை பார்த்தனர். அவர்கள் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் தேனி உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன் (வயது 53) தலைமையில், தேனி வனச்சரகர் அருள்குமார் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.

அதிகாரியை தாக்கியது

அப்போது வேலியில் சிறுத்தையின் தலை சிக்கி இருந்தது. அதை வனத்துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சோலார் மின்வேலியில் இருந்து சிறுத்தையை உயிருடன் மீட்டனர். அப்போது அந்த சிறுத்தை வனப்பகுதியை நோக்கி ஓட முயன்றது.

திடீரென திரும்பிய அந்த சிறுத்தை அங்கு நின்ற உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன் மீது பாய்ந்து அவரை தாக்கியது. இதில் அவர் வலியால் அலறி துடித்தார். பின்னர் வனத்துறையினர் சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதையடுத்து சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்த மகேந்திரனை வனத்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக தேனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த சிறுத்தைக்கு சுமார் 2½ வயது இருக்கும். ஏதேனும் வனவிலங்கை இரைக்காக வேட்டையாட துரத்தி வந்தபோது வேலியில் சிக்கி இருக்கலாம் என்று வனத்துறை தரப்பில் கூறப்பட்டது.


Next Story