பொள்ளாச்சி அருகே பரபரப்பு: குடும்ப தகராறில் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு-டிரைவர் கைது


பொள்ளாச்சி அருகே பரபரப்பு: குடும்ப தகராறில் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு-டிரைவர் கைது
x

பொள்ளாச்சி அருகே குடும்ப தகராறில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே குடும்ப தகராறில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

குடும்ப தகராறு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி நேரு வீதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 19). கூலித்தொழிலாளி. இவரது மாமா மகள் கீர்த்தனாவுக்கும், பொள்ளாச்சி ரங்கசாமிகவுண்டர் வீதியை சேர்ந்த டிரைவரான சூர்யாவுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இந்த தம்பதிக்கு 2 வயதில் ஆதிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 5 மாதமாக கீர்த்தனா, பெண் குழந்தையுடன் எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள தனது அம்மா வீட்டில் தங்கி வந்தார். நேற்று முன்தினம் இரவு சூர்யா தனது மனைவி கீர்த்தனாவிடம் சென்று குழந்தையை தன்னிடம் கொடுக்கவேண்டும் என தகராறு செய்து ஆதிகாவை தூக்கி சென்றுள்ளார்.

அரிவாள் வெட்டு

இதனை தொடர்ந்து குணசேகரன் மற்றும் கீர்த்தனா ஆகியோர் சூர்யா வீட்டிற்கு சென்று சத்தம் போட்டு குழந்தையை வாங்கிவிட்டு எம்.ஜி. ஆர் நகர் சென்று விட்டனர். பின்னர், குணசேகரன் மட்டும் மீண்டும் அங்கு சென்று, சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு இனி கீர்த்தனாவிடம் தகராறில் ஈடுபடக்கூடாது என அறிவுரை கூறியுள்ளார்.

அப்போது, இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த சூர்யா, குணசேகரன் தலையில் அரிவாளால் வெட்டினார்.

டிரைவர் கைது

இதனால் அவர் படுகாயம் அடைந்தார். மேலும், தகராறை தடுக்க வந்த நேரு நகரைச் சேர்ந்த மணிகண்டன் 21 என்பவரையும் சூரியா தாக்கினார். இதனால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். இது தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்கு பதிவு செய்து தொழிலாளியை அரிவாளால் வெட்டிய சூர்யாவை கைது செய்தார்.

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story