ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் பரபரப்புஅ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசை முற்றுகையிட்ட வியாபாரிகள்
முற்றுகையிட்ட வியாபாரிகள்
ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.
அ.தி.மு.க. வேட்பாளர்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். அவர் நேற்று காலை ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் உள்ள நடை பயிற்சி கூடத்தில் வாக்கு சேகரிக்க சென்றார். அங்கு நடை பயிற்சியில் ஈடுபட்டவர்களிடம் வேட்பாளர் தென்னரசு ஓட்டு கேட்டாா்.
அதன்பிறகு அருகில் உள்ள நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்குள் சென்று அவர் ஓட்டு சேகரிக்க முயன்றார்.
அப்போது, வியாபாரிகள் பலர் திரண்டு வந்து வேட்பாளரை உள்ளே நுழைய விடாமல் தடுத்து வாக்குவாதம் செய்தனர்.
வாக்குவாதம்
அப்போது வியாபாரிகள் கூறுகையில், "கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று அதிகமாக பரவி இருந்தபோது, ஈரோடு ஆர்.கே.வி.ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட், ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. வியாபாரிகளிடம் கருத்து கேட்காமல் பழைய வளாகம் இடித்து அகற்றப்பட்டு, புதிய வணிகவளாகம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் இந்த பகுதியில் எந்தவொரு அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. மழை காலத்தில் சேறும், சகதியுமாக கிடக்கிறது. 6 மாதத்தில் மீண்டும் பழைய இடத்துக்கே சென்று விடலாம் என்று கூறி இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை பழைய இடத்துக்கு மாற்றப்படாமல் உள்ளது", என்றனர்.
அதற்கு வேட்பாளர் தென்னரசு விளக்கம் அளிக்க முயன்றார்.
ஆனால், வியாபாரிகள் ஆக்ரோஷமாக அவரிடம் வாக்குவாதம் செய்தனர். அவரை மார்க்கெட் வளாகத்துக்குள் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர்.
அதன்பிறகு அவரும், அ.தி.மு.க.வினரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.