பெருந்துறை அருகே பரபரப்பு போலீஸ் போல் நடித்து கேரள ஜவுளி வியாபாரியிடம் ரூ.29 லட்சம் பறிப்பு


பெருந்துறை அருகே பரபரப்பு  போலீஸ் போல் நடித்து கேரள ஜவுளி வியாபாரியிடம் ரூ.29 லட்சம் பறிப்பு
x

பெருந்துறை அருகே போலீஸ் போல் நடித்து கேரள ஜவுளி வியாபாரியிடம் ரூ.29 லட்சத்தை பறித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை அருகே போலீஸ் போல் நடித்து கேரள ஜவுளி வியாபாரியிடம் ரூ.29 லட்சத்தை பறித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஜவுளி வியாபாரி

கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள பனங்காடு பகுதியை சேர்ந்தவர் அன்சார் (வயது 57). ஜவுளி வியாபாரி. இவர் தனது வியாபாரத்துக்கு தேவையான ஜவுளிகளை கொள்முதல் செய்ய ரூ.29 லட்சத்துடன் நேற்று முன்தினம் காரில் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வந்து கொண்டு இருந்தார். அவருடன் நண்பர்களான அபிலாஷ், பஷீர் ஆகியோரும் உடன் வந்தனர்.

காத்துக்கொண்டிருந்தார்

அன்சாருக்கு ஏற்கனவே பெருந்துறையில் ஜவுளி கொள்முதல் செய்து தருவதாக புரோக்கர் ஒருவர் கூறியுள்ளார். அந்த புரோக்கர் கூறியபடி நேற்று முன்தினம் மாலை பெருந்துறையை அடுத்த சரளை ஏரி கருப்பன் கோவில் அருகே, அன்சார் தனது நண்பர்களுடன் காரில் வந்து நின்றார். பின்னர் அவர் தனது நண்பர்களுடன் புரோக்கர் வருகைக்காக அந்த பகுதியில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது, அவர்கள் நின்ற இடத்தின் அருகே கார் ஒன்று வந்து நின்றது. அந்த காரில் இருந்து போலீஸ் சீருடை அணிந்த 2 பேர் மற்றும் காக்கி நிற பேண்ட், வெள்ளை நிற சட்டை அணிந்த 2 பேர் இறங்கினர்.

ரூ.29 லட்சம் பறிமுதல்

பின்னர் அவர்கள் அன்சாரை பார்த்து, 'உங்களிடம் கருப்பு பணம் உள்ளதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. எனவே உங்களுடைய பணத்தை எடுத்துக்கொண்டு நாங்கள் பெருந்்துறை போலீஸ் நிலையத்துக்கு செல்கிறோம். நீங்கள் அங்கு வந்து பணத்துக்கு முறையான கணக்கு காட்டி, அதை பெற்று செல்லுங்கள்,' எனக்கூறினர். மேலும் அன்சாரிடம் இருந்து ரூ.29 லட்சத்தையும் அவர்கள் பறிமுதல் செய்ததுடன், அங்கிருந்த காரில் ஏறி அனைவரும் மின்னல் வேகத்தில் சென்றனர்.

போலீஸ் எனக்கூறி...

கண் இமைக்கும் நேரத்தில் தன்னிடம் இருந்த ரூ.29 லட்சம் பறிபோனதை அறிந்ததும், அன்சார் அதிர்ச்சியில் பதற்றம் அடைந்தார். பின்னர் அவர் சுதாரித்துக்கொண்டு தமிழ் தெரிந்த தன்னுடைய நண்பர் ஒருவர் மூலம் பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கு போன் செய்து விசாரித்தார். அப்போது பெருந்துறை போலீசார் யாரும் வந்து அன்சாரிடம் பணத்தை பறிமுதல் செய்யவில்லை என தெரிய வந்தது. அப்போதுதான் அவருக்கு, 'போலீஸ் எனக்கூறி மோசடி கும்பல் தன்னை ஏமாற்றி பணத்தை பறித்து சென்றதை உணர்ந்தார்.

வலைவீச்சு

இதுகுறித்து அன்சார் பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் போல் நடித்து அன்சாரிடம் பணத்தை பறித்து சென்ற மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் பெருந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story