பொள்ளாச்சி அருகே பரபரப்பு பள்ளி மாணவிகள் 15 பேருக்கு பாலியல் தொல்லை-போக்சோவில் மளிகைக்கடைக்காரர் கைது


பொள்ளாச்சி அருகே பரபரப்பு  பள்ளி மாணவிகள் 15 பேருக்கு பாலியல் தொல்லை-போக்சோவில் மளிகைக்கடைக்காரர் கைது
x
தினத்தந்தி 19 Sept 2022 2:00 AM IST (Updated: 19 Sept 2022 2:01 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவிகள் 15 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மளிகைக்கடைக்காரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவிகள் 15 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மளிகைக்கடைக்காரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பாலியல் தொல்லை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பலர் பள்ளி அருகே உள்ள ஒரு மளிகை கடையில் படிப்பிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

இதில் 6 -ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் தனியாக கடைக்கு செல்லும் நேரத்தில் மளிகை கடைக்காரர் நடராஜன் (வயது 62) என்பவர், மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவதுடன், ஆங்காங்கே தொட்டு பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், சில மாணவிகளை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆசிரியர்கள் அதிர்ச்சி

இதில் பாலியல் தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. அப்போது 15 மாணவிகள் மளிகை கடை உரிமையாளர் நடராஜன் மூலம் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் மனவேதனையுடன் தனித்தனியாக தெரிவித்தனர். மாணவிகளின் குற்றச்சாட்டை கேட்ட பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுதொடர்பாக அந்த பள்ளி தலைமை ஆசிரியர் இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும், மளிகைக்கடைக்காரர் நடராஜனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

போக்சோவில் கைது

அப்போது, பள்ளி மாணவிகள் மட்டுமின்றி, அப்பகுதியை சேர்ந்த சில சிறுமிகளுக்கும் நடராஜன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர்.

இந்த சம்பவம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story