பொள்ளாச்சி அருகே பரபரப்பு: கோவில் இடத்தில் குளம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்


பொள்ளாச்சி அருகே பரபரப்பு:  கோவில் இடத்தில் குளம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
x

பூசாரிபட்டியில் கோவில் இடத்தில் குளம் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பூசாரிபட்டியில் கோவில் இடத்தில் குளம் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குளம் அமைக்கும் பணி

பொள்ளாச்சி அருகே பூசாரிபட்டியில் கண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இடத்தில் ஊராட்சி நிர்வாகம் மூலம் குளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று பொக்லைன் எந்திரத்தை கொண்டு குளம் அமைக்க குழி தோண்டும் பணி நடைபெற்றது. இதை அறிந்த பொதுமக்கள் அங்கு சென்று குளம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கோவில் இடத்தில் குளம் அமைக்க அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் குளம் அமைக்க கூடாது என்று கூறினார்கள். இதையடுத்து குளம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. அதன்பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கலெக்டருக்கு மனு

பூசாரிபட்டி கிராமத்தில் கண்டியம்மன் கோவில் பட்டா நிலம் உள்ளது. இந்த கோவிலுக்கு சுமார் 15 ஏக்கர் நிலம் உள்ளது. கோவில் பின்புறத்தில் சுமார் 6 ஏக்கரில் குளம் உள்ளது. இதை தவிர அருகில் 2 தடுப்பணைகள் உள்ளன. இந்த குளம் பொதுமக்களுக்கு போதுமானதாக உள்ளது. இதற்கிடையில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் புதிதாக குளம் அமைக்கப்பட உள்ளது. இந்த குளம் அமைத்தால் கோவிலுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே புதிதாக குளம் அமைக்க வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story