கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையையொட்டி கிருஷ்ணர் சிலைகள் மும்முரமாக விற்பனை


கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையையொட்டி கிருஷ்ணர் சிலைகள் மும்முரமாக விற்பனை
x

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையையொட்டி சென்னையில் விற்பனைக்கு வந்துள்ள கிருஷ்ணர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.

சென்னை

ஆவணி மாதம் தேய்பிறையின் 8-ம் நாள் ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ண ஜெயந்தி இந்துக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிருஷ்ணன் குழந்தை அவதாரமாக நம் வீட்டுக்கு வந்து அருள்பாலிப்பதே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக கொண்டாடுகின்றோம். கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு பூக்கள், மாவிலை தோரணங்களால் அலங்காரம் செய்யப்படுகிறது.

இந்த விழாவை பலர் வீடுகளில் கிருஷ்ணர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். அவர் விரும்பி உண்ணும் இனிப்பு சீடை, அதிரசம், வெண்ணெய் உள்ளிட்டவற்றை வைத்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், சைதாப்பேட்டை, மாம்பலம் போன்ற மாநகரின் பல்வேறு இடங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

களிமண்ணை அச்சில் பதித்து புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணர், வெண்ணெய் உண்ணும் கிருஷ்ணர், கிருஷ்ணர்-ராதையுடன் இருப்பது போன்ற பல்வேறு அழகிய வடிவங்களில் கிருஷ்ணர் சிலைகளை வடிவமைத்து வர்ணம் பூசி விற்பனைக்கு வைத்திருந்தனர். ரூ.100 முதல் ரூ.8 ஆயிரம் வரை பல்வேறு வடிவங்களில் வைக்கப்பட்டிருந்த சிலைகளை தங்களுக்கு பிடித்தமானவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டுக்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலில் இருந்து பூஜை அறை வரை இடப்பட்டு குழந்தைகளுக்குரிய சீடை, முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன. இதற்கு தேவையான பொருட்கள், பூஜை பொருட்கள் மற்றும் பிரசாதம் தயாரிப்பதற்கான உணவு பொருட்கள் மற்றும் சீடை, அதிரசம், அவல் மற்றும் வெண்ணெய் போன்ற பொருட்களையும் வாங்கி சென்றனர். இதனால் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம் பகுதிகளில் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வதால் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.


Next Story