புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டுஇறைச்சி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்


புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டுஇறைச்சி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 18 Sept 2023 1:00 AM IST (Updated: 18 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

விற்பனை சூடு பிடித்தது

புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் இறைச்சி சாப்பிடுவது இல்லை. இந்த மாதத்தில் இறைச்சி கடைகளில் விற்பனையும் மிக மந்தமாக இருக்கும். மேலும் அசைவ உணவகங்களிலும் விற்பனை குறைவாகவே காணப்படும்.

இந்த நிலையில் புரட்டாசி மாதம் இன்று (திங்கட்கிழமை) பிறப்பதை முன்னிட்டும், நேற்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதாலும் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று காலை முதலே இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ஆடு, கோழி மற்றும் மீன் விற்பனை சூடு பிடித்தது.

மக்கள் கூட்டம்

தர்மபுரி நகரில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகளில் நேற்று அதிகாலை முதலே பொதுமக்கள் இறைச்சி வாங்குவதில் ஆர்வம் காட்டினர். தர்மபுரி பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி மீன் மார்க்கெட் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் விற்பனை நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.இதேபோன்று அசைவ உணவகங்களிலும் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகள் மற்றும் ஓட்டல்களில் விற்பனை சூடு பிடித்தது


Next Story