பராமரிப்பின்றி கிடக்கும் வண்ணத்துப்பூச்சி பூங்கா


பராமரிப்பின்றி கிடக்கும் வண்ணத்துப்பூச்சி பூங்கா
x

கூடலூர் அருகே வண்ணத்துப்பூச்சி பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் அருகே வண்ணத்துப்பூச்சி பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

சுற்றுலா திட்டம்

இயற்கை எழில் மிகுந்த நீலகிரி மலைப்பிரதேசத்தில் ஊட்டி, குன்னூர் பகுதியில் சுற்றுலா திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதால் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், கேரளா, கர்நாடகா உள்பட வெளிமாநில பயணிகளின் நுழைவாயிலாக திகழும் கூடலூர் பகுதியில் சுற்றுலா திட்டங்கள் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

இதனால் நீண்ட தொலைவிலிருந்து வரும் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். இதனால் கூடலூரில் சுற்றுலா திட்டங்கள் தொடங்க வேண்டுமென அனைத்து தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து கூடலூர்-மைசூரு சாலையில் சுற்றுலா தகவல் மையம் அருகே பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், நீதிமன்றம் கட்டுவதற்கு இடம் வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதால் பல ஆண்டுகளாக புதர்கள் மண்டி காணப்படுகிறது.

வண்ணத்துப்பூச்சி பூங்கா

தொடர்ந்து கூடலூர் அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பண்ணை பொன்னூரில் உள்ளது. இங்கு கடந்த 2014-ம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா திறக்கப்பட்டது. இதனால் வெளி மாநிலங்கள் மட்டுமின்றி உள்ளூர் பொதுமக்களும் வண்ணத்துப்பூச்சி பூங்காவை கண்டு ரசித்து வந்தனர். இந்தநிலையில் தொடர் பராமரிப்பு இல்லாததால் வண்ணத்துப்பூச்சிகள் வரத்து இல்லாமலும், சுற்றுலா பயணிகள் இன்றியும் பூங்கா களை இழந்தது.

மேலும் பூங்காவில் மேற்கூரை பழுதடைந்து காணப்படுகிறது. தொடர் மழையால் பாசி படர்ந்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். அவர்கள் வருகை இல்லாமல், நாடுகாணி பகுதி மக்கள் வணிக ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, கூடுதல் நிதி ஒதுக்கி வண்ணத்துப்பூச்சி பூங்காவை சுற்றுலாப் பயணிகள் மொய்க்கும் மையமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story