"நெசவாளர்களிடம் கதர் ஆடைகளை வாங்குங்கள்" அரசு அலுவலர்களுக்கு கோட்டாட்சியர் வேண்டுகோள்
“நெசவாளர்களிடம் கதர் ஆடைகளை வாங்குங்கள்” என்று அரசு அலுவலர்களுக்கு கோட்டாட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் துணிகளின் சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளரும், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியருமான சுரேஷ் கலந்து கொண்டு காந்தியடிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கோட்டாட்சியர் சுரேஷ் கூறுகையில், தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் பல லட்சக்கணக்கான ஏழை எளிய நூற்போர், நெசவாளர்களுக்கு இடையராத வேலை வாய்ப்பினை அளித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவி ஆற்றி வருகிறது. காந்தியடிகளின் சுதந்திர போராட்ட கால சின்னமாக கதர் ஆடை திகழ்கிறது.
ஒவ்வொரு இந்தியரும் நம்முடைய தேசிய தினங்களாகிய சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தியடிகளின் பிறந்த தினம் ஆகிய தினங்களில் அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதர் ஆடையாவது வாங்கி உடுத்த முன்வர வேண்டும்.
30 சதவீதம் தள்ளுபடி
கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடு ரூ. 98 லட்சத்து 40 ஆயிரம் முழுமையாக எட்டப்பட்டது. இந்த ஆண்டு ரூ.1 கோடியே 3 லட்சத்து 50 ஆயிரம் விற்பனை குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காதி கிராப்டில் இந்த ஆண்டும் சிறப்பு விற்பனையாக கதர், பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. எனவே அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கதர் ஆடைகளை வாங்கி கிராம நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட உதவிட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) அனந்த சயனன், கதர் அங்காடி மேலாளர் கலியமூர்த்தி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.