தொழில் அதிபரை கொலை செய்து காரில் வைத்து உடல் எரிப்பு
தொழில் அதிபரை கொலை செய்து காரில் வைத்து உடல் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட தொழில் அதிபரை கொலை செய்து உடலை காரில் வைத்து எரித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரில் எரிந்த நிலையில் பிணம்
தூத்துக்குடி மாவட்டம் வைப்பார்-பல்லாக்குளம் ரோட்டில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு கார் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது கார் முழுவதும் எரிந்து கிடந்தது. காரின் பின்பகுதியில் பொருட்கள் வைக்கக்கூடிய இடத்தில் கருகிய நிலையில் ஒருவரின் உடல் கிடந்தது.
தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் காரின் பதிவு எண்ணை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த கார் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த தொழில் அதிபர் நாகஜோதி (வயது 48) என்பவருக்கு சொந்தமானது என்பதும், மேலும் அவரை காணவில்லை என்று போலீசில் அவரது மனைவி புகார் அளித்து இருப்பதும் தெரியவந்தது. சம்பவ இடத்தில் செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது. அது ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தை சேர்ந்த மைக்கேல்ராஜ் (30) என்பவருக்கு சொந்தமானது என கண்டுபிடிக்கப்பட்டது.
பரபரப்பு தகவல்
இதையடுத்து மைக்கேல்ராஜை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் நாகஜோதி படுகொலை செய்யப்பட்ட பரபரப்பு தகவல் தெரியவந்தது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
நாகஜோதி பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தார். அவர் வெளியூர் செல்லும் நேரங்களில் தனது காருக்கு டிரைவராக மைக்கேல்ராஜை அழைத்து செல்வார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வங்கியில் அடமானம் வைத்த தனது நகைகள் ஏலத்துக்கு வர இருப்பதாக கூறி அதை மீட்க ரூ.2 லட்சம் தருமாறு நாகஜோதியிடம் மைக்கேல்ராஜ் கேட்டு உள்ளார். நாகஜோதியும் அவருக்கு பணம் கொடுத்து உதவினார்.
தற்போது பணத்தை திருப்பி தருமாறு நாகஜோதி கேட்கவே, அவரை மிரட்டி பணம் பறிக்க மைக்கேல்ராஜ் திட்டமிட்டார். இதற்காக அவர் தனது தம்பி கனி (26), உறவினர்கள் மைக்கேல்ராஜ் என்ற மாரி (28), கணபதிராஜன் ஆகியோருடன் சேர்ந்து நாகஜோதியை கடத்தி பணம் பறிக்க திட்டம் தீட்டினார்.
பணம் தருவதாக...
அதன்படி நேற்று முன்தினம் காலை நாகஜோதியை தொடர்பு கொண்ட மைக்கேல்ராஜ், விளாத்திகுளத்தில் ஒருவர் தனக்கு ரூ.2 லட்சம் தருவதாக கூறி உள்ளார். அதனை வாங்கி உங்கள் கடனை அடைத்து விடுகிறேன் என்று கூறி உள்ளார். அதனை நம்பிய நாகஜோதி காலை 8 மணியளவில் சாயல்குடியில் இருந்து காரில் புறப்பட்டார். காரை மைக்கேல்ராஜ் ஓட்டினார்.
சாயல்குடியை கடந்து சிறிது தூரம் வந்தபோது, அங்கு தயாராக நின்று கொண்டிருந்த மாரி, கணபதிராஜன், கனி ஆகியோரையும் காரில் ஏற்றினார். தான் கடத்தி செல்லப்படுவதை அறியாத நாகஜோதி கேட்டபோது, ஜாமீன் கையெழுத்து போடுவதற்கு ஆட்கள் தேவைப்படுவதாக கூறி மைக்கேல்ராஜ் சமாளித்து இருக்கிறார்.
கழுத்தை நெரித்துக்கொலை
சூரங்குடி அருகே குமரசக்கனாபுரம் பகுதியில் வந்தபோது அவர்கள் 4 பேரும் சேர்ந்து நாகஜோதியிடம் பணம் கேட்டு மிரட்டினர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததால், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து நாகஜோதியின் கழுத்தை நெரித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.
பின்னர் 4 பேரும் நாகஜோதியின் உடலை புதைக்க முடிவு செய்து, அதை காரின் பின்பகுதியில் பொருட்கள் வைக்கும் பகுதியில் வைத்து பூட்டினர். பின்னர் விளாத்திகுளம், பிள்ளையார்நத்தம், தூத்துக்குடி உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்று பார்த்தும், அவர்களுக்கு மறைவிடம் கிடைக்கவில்லை. இதனால் காருடன் உடலை எரித்து விட முடிவு செய்து, கன்னிராஜபுரத்துக்கு சென்று ஒரு சரக்கு ஆட்டோவில் விறகு, பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு வைப்பார்-பல்லாகுளம் ரோட்டுக்கு வந்தனர். அங்குள்ள காட்டுப்பகுதியில் காரை நிறுத்தி, அதற்குள் விறகுகளை போட்டு, பெட்ரோல் ஊற்றி தீவைத்தனர். கார் மளமளவென தீப்பற்றி எரிந்தபோது, அதில் இருந்த தீயணைப்பு அலாரம் ஒலித்தது.
4 பேர் கைது
இதனால் பதற்றம் அடைந்த 4 பேரும் சரக்கு ஆட்டோவில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக மைக்கேல்ராஜின் செல்போன் தவறி விழுந்து உள்ளது. இதனால் அவர்கள் போலீசாரின் பிடியில் சிக்கி உள்ளனர்.
இவ்வாறு போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மைக்கேல்ராஜ், கனி, மாரி, கணபதிராஜன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் தொழில் அதிபரை கடத்தி கொன்று உடலை காரில் வைத்து எரித்த கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.