சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையால் ரோட்டில் விழுந்த மரங்கள் அகற்றும் பணி தீவிரம்


சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையால்  ரோட்டில் விழுந்த மரங்கள் அகற்றும் பணி தீவிரம்
x

மழையால் ரோட்டில் விழுந்த மரங்கள் அகற்றும் பணி தீவிரம்

ஈரோடு

சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையால் ரோட்டில் விழுந்த மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடந்தது.

மரங்கள் சாய்ந்தன

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. ஈரோட்டில் மழையுடன் சேர்ந்து பலத்த சூறாவளி காற்று வீசியது. திண்டல், செங்கோடம்பாளையம், ரங்கம்பாளையம், ரெயில்வே காலனி உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. பெருந்துறை ரோட்டின் ஓரத்தில் நின்ற பல மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மின்சார கம்பிகள் மீது மரக்கிளைகள் விழுந்து துண்டிக்கப்பட்டதால், மின்சாரம் தடை ஏற்பட்டது. திண்டலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வேருடன் சாய்ந்த மரம் அங்கு நின்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸ் மற்றும் கார் மீது விழுந்தது. அந்த மரம் நேற்று அகற்றப்படாமல் கிடந்தது. திண்டல் காராப்பாறை பகுதியில் உள்ள கோவில் மேற்கூரை காற்றில் தூக்கி வீசப்பட்டு கிடந்தது.

வெட்டி அகற்றும் பணி

செங்கோடம்பாளையம் மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கூட வளாகத்தில் பெயர்ந்து விழுந்த மரம் நேற்று அகற்றப்பட்டது. இதுபோல் அந்த பகுதியில் கோல்டன் சிட்டி, டெலிகாம் சிட்டி பகுதிகளிலும் நேற்று மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு சாலை போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில் அந்தந்த பகுதி மக்கள் கூலி ஆட்கள் வைத்து மரங்களை வெட்டி அகற்றினார்கள்.

ரங்கம்பாளையம் ரெயில்வே பாலம் அருகே பெரிய மரம் ஒன்று சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அந்த மரம் வெட்டி அகற்றப்பட்டது. ரங்கம்பாளையம் நல்லியம்பாளையம் ரோட்டில் வேப்ப மரங்கள், வேலி மரங்கள் சாய்ந்தன.

ரோட்டில் சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றும் பணி நேற்று தீவிரமாக நடந்தது. காற்றினால் சேதம் அடைந்த தனியார் ஜவுளி நிறுவனம் மற்றும் வீடுகளின் மேற்கூரைகளை சரிசெய்யும் பணியும் நேற்று நடந்தது.

இதுபோல் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மின்சார வாரிய ஊழியர்கள் இரவு முழுவதும் பணியில் இருந்தனர். பல பகுதிகளுக்கு நேற்று காலையில்தான் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது.

தாழ்வான பகுதிகளில் தண்ணீர்

இந்தநிலையில் ஈரோட்டில் நேற்று மாலை திடீர் என்று மழை கொட்டத்தொடங்கியது. மாலை 5 மணி அளவில் திண்டல், செங்கோடம்பாளையம், மேல் திண்டல் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடி-மின்னலுடன் மழை கொட்டியது. இதனால் தண்ணீர் காட்டாறாக பாய்ந்தது. ரோடுகள் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை வெயில் கட்டெரித்தது. இந்த நிலையில் மாலை 5 மணியளவில் வானத்தில் மேகங்கள் சூழ்ந்தன. இதைத்தொடர்ந்து 6.15 முதல் 6.45 வரை மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழை அளவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை பதிவு மி.மீட்டர் அளவில் வருமாறு:-

தாளவாடி-60

கொடிவேரி-26.2

கவுந்தப்பாடி-23.2

வரட்டுப்பள்ளம்-15

சத்தியமங்கலம் -14.2

பெருந்துறை-14

நம்பியூர்-13

சத்தியமங்கலம்-11

மொடக்குறிச்சி-10

அம்மாபேட்டை-6.6

கொடுமுடி-6.2

ஈரோடு-7

கோபி-4.6

சென்னிமலை-3

பவானி-2.4

மேற்கண்டவாறு மழை அளவு பதிவாகி இருந்தது.

ஈரோட்டில் மழையின் அளவு 7 மி.மீட்டர் மட்டுமே இருந்தது. ஆனால், சூறாவளி காற்றால் ஏற்பட்ட பாதிப்பு கடுமையாக இருந்தது.


Next Story