முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம்இயற்கை பேரிடர்களை தவிர்க்கலாம்; தேசிய மேலாண்மை இயக்குனர் பேச்சு
தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் இயற்கை பேரிடர்களை தவிர்க்கலாம் என்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பயிற்சி பட்டறையில் தேசிய பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராஜேந்திர ரத்னு பேசினார்.
பேட்டை:
தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் இயற்கை பேரிடர்களை தவிர்க்கலாம் என்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பயிற்சி பட்டறையில் தேசிய பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராஜேந்திர ரத்னு பேசினார்.
பயிற்சி பட்டறை
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாற்று துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் சார்பில், பேரிடர் மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி பட்டறை 5 நாட்கள் நடந்தது. இதன் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. பேராசிரியர் சென்ராய பெருமாள் வரவேற்று பேசினார். தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரி குமார் ரேகா தொடக்க உரையாற்றினார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், பதிவாளர் சாக்ரடீஸ், ஆங்கில துறைத்தலைவர் மற்றும் மொழிப்புல முதல்வர் பிரபாகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
தேசிய பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராஜேந்திர ரத்னு சிறப்புரையாற்றினார். அவர் கூறியதாவது:-
தகுந்த முன்னெச்சரிக்கை
பேரிடர் மேலாண்மை பயிற்சியில் பங்கேற்ற பேராசிரியர்கள், தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகள், அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், இங்கு கற்றுக்கொண்டதை பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நமது நாட்டில்தான் அதிக இளைஞர்களும் உள்ளனர். இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள்தோறும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, தாழ்வான கரையோர பகுதிகளில் வசிப்பவர்களை மாற்று இடத்துக்கு உடனே அழைத்து செல்வது அவசியம். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் இயற்கை பேரிடர்களை தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒருங்கிணைப்பாளர் செல்வராஜூ நன்றி கூறினார். இதில் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி பட்டறையில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.