ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்படவில்லை; அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதியில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்படவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்படவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
போலி வாக்காளர்கள்
ஈரோடு வீரப்பன்சத்திரம் காவிரிரோட்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் ஆதரவுடன் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகத்தான வெற்றி பெறுவார். ஈரோடு கிழக்கு தொகுதியில் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளதாக எதிர் அணியில் இருப்பவர்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 936 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் இருக்கிறார்கள். சுமார் 60 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். எனவே போலி வாக்காளர்கள் சேர்க்கப்படவில்லை.
நேர்மை
கடந்த தேர்தலில் எவ்வளவு வாக்குகள் இருந்தது, இந்த தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசம் உள்ளது என்பது தெரியாமல் பேசுகிறார்கள் எதிர்க்கட்சியினர் நாங்கள் அடைய உள்ள வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்போதே அவர்களது தோல்வியை ஒப்புக்கொள்வதற்காக இந்த கருத்துகளை முன் வைக்கிறார்கள்.
எங்களது வேட்பாளா் வேட்புமனு தாக்கலின்போது கூட தேர்தல் விதிமுறையின்படி 5 பேருடன் சென்று தான் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த தேர்தல் என்பது நேர்மையாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடந்து வருகிறது.
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். இந்த பேட்டியின்போது வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடனிருந்தார்.