3 ஊராட்சி தலைவர் பதவி உள்பட 10 இடங்களுக்கு இடைத்தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 3 ஊராட்சி தலைவர் பதவி உள்பட 10 இடங்களுக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது.
தூத்துக்குடி:
தமிழகத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு ஜூலை 9-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நேற்று காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. தூத்துக்குடி ஒன்றியம், மறவன்மடம் ஊராட்சி 2-வது வார்டு, முடிவைத்தானேந்தல் ஊராட்சி 8-வது வார்டு, திருச்செந்தூர் ஒன்றியம் பிச்சிவிளை ஊராட்சி 2-வது மற்றும் 3-வது வார்டுகள், வீரபாண்டியன்பட்டினம் (ரூரல்) 9-வது வார்டு, உடன்குடி ஒன்றியம் வெள்ளாளன்விளை 1-வது வார்டு, ஓட்டப்பிடாரம் ஒன்றியம் சந்திரகிரி ஊராட்சி 6-வது வார்டு ஆகிய வார்டுகளின் உறுப்பினர் பதவிக்கு நேற்று தேர்தல் நடந்தது.
இதேபோல் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் அகரம், ஆழ்வார்திருநகரி ஒன்றியம் குறிப்பன்குளம், கயத்தாறு ஒன்றியம் வெள்ளாளங்கோட்டை ஆகிய 3 கிராம ஊராட்சிகளுக்கான தலைவர் பதவிக்கும் தேர்தல் நடந்தது. வெள்ளாளங்கோட்டை பஞ்சாயத்து தலைவர் பெரியதாய் உடல்நலக்குறைவாகல் இறந்ததால், அந்த பஞ்சாயத்துக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 2 பெண்கள் போட்டியிட்டனர். வெள்ளாளங்கோட்டை, சூரியமினிக்கன், வலசால் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வெள்ளாளங்கோட்டையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் பாதுகாப்பு கவச உடை அணிந்து வந்து வாக்குப்பதிவு செய்தார். கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.