கொப்பரை விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரிப்பு
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் கொப்பரை விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரித்தது.
ஆனைமலை,
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் 62 விவசாயிகள் 477 மூட்டைகளில் கொப்பரையை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். முதலில் கொப்பரை தேங்காய்களை தரம் பிரிக்கும் பணி நடைபெற்றது. தாராபுரம், காங்கேயம், கேரளா மாநிலத்தை சேர்ந்த 7 வியாபாரிகள் பொது ஏலத்தில் கலந்துகொண்டனர். இதில் 245 மூட்டை முதல் ரக கொப்பரை ஒரு கிலோவுக்கு 75 ரூபாய் 20 காசு முதல் ரூ.82 வரை ஏலம் விடப்பட்டது. 232 மூட்டை 2-ம் ரக கொப்பரை ஒரு கிலோவுக்கு ரூ.58 முதல் 72 ரூபாய் 50 காசு வரை ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கொப்பரை தேங்காய் கிலோவுக்கு 1 ரூபாய் 25 காசு விலை அதிகரித்து உள்ளது. மேலும் தேங்காய் சீசன் தொடக்கம் என்பதால், தேங்காய் விலை சற்று உயர்ந்து இருக்கிறது. இதனால் தேங்காயை உடைத்து கொப்பரைக்கு காய வைப்பதால் விவசாயிகள் லாபம் ஈட்ட முடியாத நிலை உள்ளது. இதனால் 21 மூட்டைகள் கொப்பரை வரத்து குறைந்துள்ளது என்று ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தெரிவித்தார்.