ஆபத்தை ஏற்படுத்தும் கேபிள் ஒயர்கள்- பொதுமக்கள் கருத்து


ஆபத்தை ஏற்படுத்தும் கேபிள் ஒயர்கள்- பொதுமக்கள் கருத்து
x

ஆபத்தை ஏற்படுத்தம் வகையில் உள்ள கேபிள்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வேலூர்

ஆபத்தை ஏற்படுத்தம் வகையில் உள்ள கேபிள்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

சென்னையில் இணையதளம் உள்பட தனியார் நிறுவனங்களின் சில சேவைகள் கேபிள் இணைப்பு மூலமே வழங்கப்படுகின்றன. அந்த கேபிள்களை முறையாக எடுத்துச்செல்லாததால், இங்கும், அங்கும் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையை நகரில் பல இடங்களில் பார்க்க முடிகிறது.

பெரும்பாலான தெருக்களில் மாநகராட்சி தெரு விளக்கு கம்பங்களை ஆக்கிரமித்துத்தான் தனியார் கேபிள்கள் கொண்டுசெல்லப்படுகின்றன. இது தனியார் நிறுவனங்களின் கேபிள்களுக்கு ஏதோ மாநகராட்சியே வசதி செய்து கொடுத்ததுபோல இருப்பதாக பலருக்கு ஆதங்கத்தை தருகிறது.

ஆபத்தை ஏற்படுத்தும்

இதை சாதாரணமாக கூறிவிட முடியாது. பல சமயங்களில் இந்த ஒயர்கள் ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன. சாலைகளில் தொங்கியபடி கிடக்கும் ஒயர்கள் வாகனங்களில் சிக்கும்போது வாகன ஓட்டிகளுக்கும், அவ்வழியாக கடந்து செல்பவர்களுக்கும் அபாயத்தை உண்டாக்குகின்றன. சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான விபத்துகளையும்கூட ஏற்படுத்திவிடுகின்றன.

தொங்கிக்கிடக்கும் ஒயர்களை முறையாக கவனித்து அகற்றுவது கேபிள்களை கொண்டுசெல்லும் தனியார் நிறுவனங்களின் பொறுப்பு. ஆனால் அந்நிறுவனங்கள் அதைச் சரிவர செய்வது கிடையாது.

கம்பங்களை நட்டு கேபிள்களை கொண்டுசெல்லாமல், மரங்களில் தொங்கவிட்டும், வீடுகளின் மீதும் அனுமதி இல்லாமல் எடுத்துச்செல்கின்றனர். இதில் எத்தனை கேபிள்கள் உரிய அனுமதி பெற்று கொண்டுசெல்லப்படுகின்றன என்பதும் புரியாத புதிர். இதுபற்றிய குற்றச்சாட்டை பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ஒரு கவுன்சிலர் சமீபத்தில் முன்வைத்திருந்தார்.

பல இடங்களில் தனியார் கேபிள்கள் அறுந்து விழுந்து, கேட்பாரற்று வெகுநாட்களாக கிடக்கும் நிலையையும் காணமுடிகிறது.

இதையெல்லாம் சீர்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தனியாக கம்பங்கள்

வேலூர் திடீர்நகரை சேர்ந்த ரமேஷ்:-

வேலூர் மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் கேபிள் ஒயர்கள் தாழ்வாக செல்வதை காணலாம். ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டுமே கேபிள் ஒயருக்கான கம்பங்கள் நடப்பட்டு, அவற்றின் மூலம் வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பகுதிகளில் மின்கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள், மரங்கள், மற்றும் வீட்டு மாடியின் வழியாக கேபிள் ஒயர்கள் செல்கின்றன. முறையாக கம்பங்கள் அமைத்து வீடுகளுக்கு கேபிள் இணைப்பு கொடுக்காததால் தடையின்றி டி.வி. பார்க்க முடிவதில்லை. அவ்வப்போது தொழில் நுட்ப கோளாறு காரணமாக சிக்னல் கிடைப்பதில்லை. வீடுகள், கடைகள், வணிக வளாகங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு தனியாக மின்மாற்றி, மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. அதேபோன்று கேபிள் டி.வி. உரிமையாளர்களும் கேபிள் ஒயர்களுக்காக தனியாக கம்பங்கள் அமைத்து வீடுகளுக்கு இணைப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்கும். மேலும் கேபிள் டி.வி. மாதாந்திர கட்டணத்தை சிறிதளவு குறைக்க வேண்டும் என்றார்.

கே.வி.குப்பம் தாலுகா, வடுகந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த பிரபு:- வீடுகளின் மேல் கேபிள் ஒயர்கள் சென்று கொண்டிருக்கிறது. சிலர் ஆபத்தை உணராமல் இதன் மீது ஈரமான துணிகளை காய வைக்கின்றனர். மேலும் மின்சார ஒயர்களின் அருகிலும், மின் கம்பங்களில் கட்டியும் எடுத்து செல்லப்படுகிறது. இதனால், மின்சார விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கேபிள் ஒயர் இணைப்புகள் இருக்கும் இடங்களில் திறந்த படியே டேப் ஒட்டாமல் விடப்பட்டுள்ளது. இதனால், எதிர்பாராத வகையில் மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. இது மழைக் காலங்களில் மிக அதிக அளவில் ஆபத்தை உண்டாக்கும். எனவே கேபிள் ஒயர்களை பூமிக்கு அடியில் கொண்டு சென்று பாதுகாப்பாக இணைப்பு வழங்கினால் விபத்துகளை தடுக்க முடியும்.

அனுமதி பெற வேண்டும்

திருப்பத்தூரை சேர்ந்த எஸ்.இ.தண்டபாணி:- கேபிள் ஒயர்கள் தற்போது மின் கம்பங்களில் கட்டப்பட்டு வருகிறது. இதனால் மின் கம்பங்களில் ஏறும் மின் ஊழியர்கள் கேபிள் ஒயர் மூலம் மின்சாரம் தாக்கப்பட்டு இறக்க நேரிடுகிறது. சமீபத்தில் கொடைக்கானலில் கேபிள் ஒயர் மூலம் மின்சாரம் தாக்கி ஒருவர் இறந்தார். எனவே இது போன்று நடைபெறாமல் இருக்க மின்சார வாரியத்தின் அனுமதி பெற்று கேபிள் ஒயரை கொண்டு செல்ல வேண்டும். அனுமதி பெற்றால் மின்வாரிய அதிகாரிகள் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வார்கள். மேலும் கேபிள் ஒயர்களை மின்கம்பங்கள் வழியாக பயன்படுத்த கட்டணம் வசூலிக்க வேண்டும். மின்கம்பங்களில் கேபிள் ஒயர்களை கட்டுவதற்கு நிபந்தனைகளை ஏற்று, கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் இன்சூரன்ஸ் செலுத்தி இருக்க வேண்டும். ஏதாவது விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் மூலம் பணம் பெற்றுத் தர வேண்டும்.

வாணியம்பாடியை சேர்ந்த நஜீர் அகமது:- கேபிள் டி.வி. ஒயர்கள் பல இடங்களில் மின்கம்பங்கள், புளிய மரங்கள், இதர மரங்களிலும், உயர் மின்னழுத்த கம்பங்களிலும், அபாயகாரமான இடங்களின் வழியாகவும் கொண்டு செல்லப்பட்டு வீடுகளுக்கு இணைப்புகள் அளித்துள்ளனர். இதனால் திடீரென காற்று, மழை உள்ளிட்ட நேரங்களிலும், மரங்கள் முறிந்து விழும் நேரங்களிலும் ஆபத்துக்கள் ஏற்பட்டு, வீடுகளில் உள்ள டி.வி. பழுதடைவதுடன், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே கேபிள் ஒயர்களை கொண்டு செல்வதை முறைப்படுத்தி, பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் உயிர்காக்கும் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்.

மின் ஊழியர்கள் பாதிப்பு

ஆற்காடு பகுதியை சேர்ந்த என்.சதீஷ்:- பெரும்பாலான இடங்களில் கேபிள் ஒயர்கள் மின் கம்பங்கள் மூலமாகத்தான் எடுத்துச் செல்கின்றன. இதனால் வீட்டினுடைய மின் இணைப்பில் பழுது ஏற்பட்டால் மின்சாரத்துறை ஊழியர்கள் மின் கம்பத்தில் ஏறி பழுது பார்க்க சிரமமாக உள்ளது. அவ்வாறு எடுத்துச் செல்லும் கேபிள் ஒயர்கள் பாதுகாப்பாகவும் இருப்பதில்லை. ஆங்காங்கே இணைப்பு செய்யப்படும் இடங்களில் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. சில இடங்களில் கைக்கு எட்டும் தூரத்திலேயே கேபிள் ஒயர்கள் செல்கின்றன. வீட்டின் மாடிகளில் ஆபத்தான நிலையில் கேபிள் ஒயர்கள் உள்ளது. கேபிள் நடத்தும் நபர்கள் இதற்கென தனியாக கம்பங்கள் அமைத்து அதன் மூலம் வயர்களை எடுத்துச் சென்றால் நன்றாக இருக்கும். ஒரு சில இடங்களில் ஒயர்கள் அறுந்து கீழே விழுந்து காணப்படுகின்றன. இதனால் விபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளது. இவற்றையெல்லாம் தவிர்த்தால் நன்றாக இருக்கும்.

அரக்கோணம் சுவால்பேட்டையை சேர்ந்த லியோ வேலு:- மின் கம்பங்களில் கட்டப்படும் கேபிள் ஒயர் மற்றும் அதற்கான வினியோக பெட்டிகளை கம்பத்தில் கட்டுவதால் மின்வாரிய பணியாளர்கள் மின் தடை பராமரிப்பு பணி மேற்கொள்ளும்போது விபத்து ஏற்படுவதற்கான காரணமாக அமைகிறது. சில நேரங்களில் மின்தடை ஏற்படுவதும் திடீரென வீசும் காற்றால் வேன், லாரிகள் மீது கேபிள் ஒயர்கள் உரசி விபத்து ஏற்படும் நிலையும் காணப்படுகிறது. கேபிள் ஒயர்களால் உயிர்ப் பலி ஆகும் சூழல் நிலவுகிறது. அதோடு மின் ஒயர்களில் உரசி வீட்டில் உள்ளவர்கள் மின் விபத்தில் சிக்கக்கூடிய நிலையும் உள்ளது. இதனை தடுக்க முறையாக கம்பங்கள் அமைத்து மின் ஒயர்கள் மேல்படாமல் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல வேண்டும். இதுகுறித்து கேபிள் டி.வி. நடத்துபவர்களும், அரசு அதிகாரிகளும், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்தி அசம்பாவிதங்களில் இருந்து பொது மக்களை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதுகாப்பான முறையில்

திருவண்ணாமலையை அடுத்த முனியப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த செந்தில்:- பெரும்பாலான தெருக்களில் மின் கம்பங்களை சுற்றி தனியார் கேபிள் ஒயர்கள் கொண்டு செல்லப்படுகின்றன. சாலைகளில் தொங்கியபடி கிடக்கும் ஒயர்கள் வாகனங்களில் சிக்கும் போது வாகன ஓட்டிகளுக்கும், அவ்வழியாக நடந்து செல்பவர்களுக்கும் சில சமயங்களில் விபத்துகளை ஏற்படுத்து கின்றன. தனியாக கம்பங்கள் நட்டு கேபிள் ஒயர்களை கொண்டு செல்லாமல் மரங்களில் தொங்கவிட்டும், வீடுகளின் மீதும் அனுமதி இல்லாமல் எடுத்து செல்கின்றனர். மேலும் ஆங்காங்கே அலங்கோலமாக காட்சி அளிக்கும் கேபிள் ஒயர்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணமங்கலம் கொங்கராம்பட்டு பகுதியை சேர்ந்த மதன்குமார்:- கண்ணமங்கலம் பகுதிக்கு வேலூர் பகுதிகளிலிருந்து கேபிள் ஒயர்கள் வருகிறது. இங்கு கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் இணைப்பு வழங்கி வருகின்றனர். சில சமயங்களில் கேபிள் ஒயர்கள் குரங்குகள் தொல்லை காரணமாக ஆங்காங்கே துண்டிக்கப்படுகிறது. எனவே கேபிள் ஒயர்களை பாதுகாப்பான முறையில் கொண்டு சென்று இணைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story