ஆபத்தை ஏற்படுத்தும் கேபிள் ஒயர்கள்-பொதுமக்கள் கருத்து
ஆபத்தை ஏற்படுத்தும் கேபிள் ஒயர்கள் பற்றி பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
இணையதளம் உள்பட தனியார் நிறுவனங்களின் சில சேவைகள் கேபிள் இணைப்பு மூலமே வழங்கப்படுகின்றன. அந்த கேபிள்களை முறையாக எடுத்துச்செல்லாததால், இங்கும், அங்கும் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையை நகரில் பல இடங்களில் பார்க்க முடிகிறது.
பெரும்பாலான தெருக்களில் மாநகராட்சி தெரு விளக்கு கம்பங்களை ஆக்கிரமித்துத்தான் தனியார் கேபிள்கள் கொண்டுசெல்லப்படுகின்றன. இது தனியார் நிறுவனங்களின் கேபிள்களுக்கு ஏதோ உள்ளாட்சி அமைப்பே வசதி செய்து கொடுத்ததுபோல இருப்பதாக பலருக்கு ஆதங்கத்தை தருகிறது.
ஆபத்தை ஏற்படுத்தும்
இதை சாதாரணமாக கூறிவிட முடியாது. பல சமயங்களில் இந்த ஒயர்கள் ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன. சாலைகளில் தொங்கியபடி கிடக்கும் ஒயர்கள் வாகனங்களில் சிக்கும்போது வாகன ஓட்டிகளுக்கும், அவ்வழியாக கடந்து செல்பவர்களுக்கும் அபாயத்தை உண்டாக்குகின்றன. சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான விபத்துகளையும்கூட ஏற்படுத்திவிடுகின்றன.
தொங்கிக்கிடக்கும் ஒயர்களை முறையாக கவனித்து அகற்றுவது கேபிள்களை கொண்டுசெல்லும் தனியார் நிறுவனங்களின் பொறுப்பு. ஆனால் அந்நிறுவனங்கள் அதைச் சரிவர செய்வது கிடையாது.
கம்பங்களை நட்டு கேபிள்களை கொண்டுசெல்லாமல், மரங்களில் தொங்கவிட்டும், வீடுகளின் மீதும் அனுமதி இல்லாமல் எடுத்துச்செல்கின்றனர். இதில் எத்தனை கேபிள்கள் உரிய அனுமதி பெற்று கொண்டுசெல்லப்படுகின்றன என்பதும் புரியாத புதிர்.
பல இடங்களில் தனியார் கேபிள்கள் அறுந்து விழுந்து, கேட்பாரற்று வெகுநாட்களாக கிடக்கும்நிலையையும் காணமுடிகிறது.
இதையெல்லாம் சீர்ப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பராமரிக்க வேண்டும்
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த முத்து:-
கேபிள் ஒயர்கள் நெல்லை மாநகர பகுதியில் பல இடங்களில் தாழ்வாக உள்ளன. சில இடங்களில் கழுத்தில்பட்டு ஆபத்தை ஏற்படுத்துகிறது. பல இடங்களில் மின் கம்பங்களில் இந்த ஒயர்கள் கட்டப்பட்டிருப்பதால் மின்கம்பத்தின் அருகில் செல்லும்போது ஒயர்களில் கைவைத்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேபிள் ஒயர் இழுத்துக் கொண்டிருந்த ஊழியர்கள் 3 பேர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தனர். இதில் ஒருவர் இறந்து விட்டார். எனவே கேபிள் ஒயர்கள் மற்றும் தொலைதொடர்புத்துறை ஒயர்கள் தாழ்வாக செல்வதை சரிசெய்து சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.
அறுந்து கிடக்கிறது
ராஜவல்லிபுரத்தை சேர்ந்த பரமசிவபாண்டியன்:-
கேபிள் ஒயர் பல இடங்களில் அறுந்து கிடக்கிறது. இதனால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். பல இடங்களில் மின்சார கம்பங்களில் தான் கேபிள் ஒயர்களுக்கான பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ஒயர்களும் அதிக அளவில் பின்னி பிணைந்து மின்கம்பத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஏறி பணி செய்ய முடியாத அளவிற்கு கிடக்கிறது. இதைபோல் தொலை தொடர்புத்துறைக்குரிய ஒயர்களும் அதிக அளவில் தாழ்வாக செல்கிறது. சில இடங்களில் அறுந்து கிடக்கிறது. இதனால் வாகனங்களில் செல்லும்போது விபத்து ஏற்படுகிறது.
தொங்கும் ஒயர்கள்
தென்காசி கூலக்கடை பஜார் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்:-
பல்வேறு பகுதிகளில் கேபிள் ஒயர்கள் தொங்கிக் கொண்டு இருக்கின்றன. தாழ்வான பகுதிகளில் இதுபோன்று இருப்பதால் அந்த பகுதி வழியாக செல்பவர்களுக்கு சிரமமாக உள்ளது. திடீரென இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் கழுத்தில் விழுந்தால் பெரிய ஆபத்தை விளைவிக்கும். சில நாட்களுக்கு முன்பு நான் இருக்கும் பகுதியில் உள்ள கட்டிடத்தில் இதுபோன்று கேபிள் ஒயர்கள் தொங்கி கொண்டிருந்தன. பல நாட்கள் இது போன்ற நிலை இருந்தது. சம்பந்தப்பட்டவர்களிடம் கூறி பின்னர் சீர் செய்யப்பட்டது. எனவே இது போன்று தொங்கும் ஒயர்களை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.
ஆபரேட்டர்-அதிகாரி
கேபிள் ஆபரேட்டர் ஒருவர் கூறுகையில், 'கேபிள் ஒயர்கள் தாழ்வாக செல்வது பற்றி எங்களுக்கு தகவல் கிடைத்தவுடன் நாங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடனே அந்த ஒயர்களை சரி செய்கிறோம்' என்றார்.
மின்சார வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கேபிள் ஒயர்கள் மின் கம்பத்தையொட்டி செல்லக்கூடாது. நெல்லை மாநகர பகுதியில் அதிகளவில் கேபிள் ஒயர்கள் மின் கம்பத்தில் கட்டப்பட்டுள்ளன. பாக்ஸ்களும் மின்கம்பத்தில் கிடக்கின்றன. இதை முறையாக ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட கேபிள் இணைப்புகளுக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்க உள்ளோம்' என்றார்.
தரைவழி
தூத்துக்குடியை சேர்ந்த மோ.அன்பழகன்:-
மின்சாரம் அடிப்படையிலான பல்வேறு பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். இதற்காக மின்சாரம் வினியோகிப்பதற்காக மின்கம்பங்கள் நடப்பட்டு உள்ளன. இந்த மின்கம்பங்களில் கேபிள் ஒயர்கள் கட்டப்பட்டு உள்ளன. பல இடங்களில் இந்த ஒயர்கள் தாழ்வாகவும் செல்கின்றன. சில நேரங்களில் அறுந்து விழுந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆகையால் தரைவழியாக கொண்டு செல்ல வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கேபிள்கள் கொண்டு செல்வதற்காக தனியாக குழாய்களும் பதிக்கப்பட்டு உள்ளன. அதனை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சேவை வழங்க வேண்டும். இதனை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.