கொடைக்கானல் வானியல் ஆய்வகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்


கொடைக்கானல் வானியல் ஆய்வகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2023 4:00 AM IST (Updated: 24 Aug 2023 4:00 AM IST)
t-max-icont-min-icon

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நேற்று வெற்றிகரமாக நிலவில் இறங்கியது. இதையொட்டி கொடைக்கானல் வானியல் ஆய்வகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல்

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நேற்று வெற்றிகரமாக நிலவில் இறங்கியது. இதன் மூலம் இந்தியா விண்வெளி துறையில் சரித்திர சாதனை படைத்துள்ளது. இந்த அரிய நிகழ்வை கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கண்டுகளித்தனர். இதற்காக அங்கு பிரத்யேகமாக திரை அமைக்கப்பட்டு, விக்ரம் லேண்டர் தரையிறங்குவதை நேரலையாக காட்சிப்படுத்தப்பட்டது. இதுகுறித்து முதன்மை ஆராய்ச்சியாளர் எபினேசர் தலைமையிலான விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர்.

விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கியபோது உற்சாகத்துடன் மாணவ-மாணவிகள் கைகளை தட்டியும், ஜெய்ஹிந்த் கோஷங்களை எழுப்பியும், தேசியக்கொடிகளை ஏந்தியபடி ஆரவாரம் செய்து உற்சாகம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து விக்ரம் லேண்டர் வடிவத்தில், வான் இயற்பியல் ஆய்வக வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இதேபோல் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே பா.ஜ.க.வினர், கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் தேசியக்கொடியை ஏந்தியபடி வாழ்த்து கோஷமிட்டனர். பின்னர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சந்திரயான்-3 வெற்றியை கொண்டாடினர். முன்னதாக சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க வேண்டி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் அவர்கள் வழிபாடு செய்தனர். கொடைரோடு ரெயில் நிலையம் அருகே பொதுமக்கள் சார்பில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்க வேண்டி அதன் புகைப்படத்தை வைத்து பிரார்த்தனை செய்தனர். பின்னர் சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதும் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். அப்போது பல்வேறு வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.


Next Story