தோட்டக்கலை பயிர்களுக்கு மானியத்துடன் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு


தோட்டக்கலை பயிர்களுக்கு மானியத்துடன் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
x

தோட்டக்கலை பயிர்களுக்கு மானியத்துடன் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி

சொட்டு நீர்ப்பாசனம்

திருச்சி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களான பழங்கள், காய்கறிகள், மலர்கள், முந்திரி, தென்னை பயிர்களுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க 2023-24-ம் ஆண்டுக்கு 2050 எக்டேர் மற்றும் நிதி ரூ.16 கோடியே 92 லட்சம் இலக்கு பெறப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகள் ஒரு ஏக்கர் முதல் அதிகபட்சமாக 5 ஏக்கர் வரையும், இதர விவசாயிகள் அதிகபட்சம் 12½ ஏக்கர் வரையும் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து பயன்பெறலாம்.

மேலும் 5 ஆண்டுகளுக்கு முன்பு சொட்டு நீர்ப்பாசனம் அமைத்திருப்பின் தற்போது மீண்டும் புதிதாக சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், கணினி சிட்டா, அடங்கல், ரேஷன்கார்டுநகல், ஆதார் கார்டு நகல், நிலவரைபடம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-3 மற்றும் தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட சிறு, குறு விவசாயி சான்று, மண், நீர் பரிசோதனை அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை http://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

83 கிராமங்களில்...

திருச்சி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் 2023-24-ம் ஆண்டுக்கு தேர்வு செய்யப்பட்ட 83 கிராமங்களில் தோட்டக்கலைத்துறை மூலம் உழவர் சந்தைகளில் காய்கறி வரத்தை அதிகரிக்க காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு எக்டேர் ஒன்றுக்கு 75 சதவீதம் மானியத்தில் ரூ.7,500 மதிப்பிலான காய்கறி விதைகள் மற்றும் இடுபொருட்களும், ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த ரூ.200 மதிப்பில் மா, கொய்யா, நெல்லி, எலுமிச்சை மற்றும் சீத்தா போன்ற 5 வகை கொண்ட பழச்செடிகள் அடங்கிய தொகுப்பு 75 சதவீத மானியத்தில் பயனாளிகள் ரூ.50 மட்டுமே செலுத்தி பழச்செடிகளை பெற்றுக் கொள்ளலாம்.

விவசாயிகள் பயன்பெறலாம்

தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தரிசு நில தொகுப்புகளில் எக்டேர் ஒன்றுக்கு ரூ.18 ஆயிரம் மானியத்தில் பல்லாண்டு தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்கத்தில் மா, கொய்யா, சப்போட்டா, நாவல், சீத்தா, எலுமிச்சை, புளி கன்று இடுபொருட்களுடன் வழங்கப்பட இருக்கிறது. இவ்வினத்திற்கு தேவையான பழச்செடிகள் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்து வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவும், TNHortnet (tnhorticulture.tn.gov.in/tnhortnet/) என்ற இணையதளம் மூலமாகவும் பதிவு செய்து பயன்பெற்று கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு திருச்சி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் அலுவலகங்களை தொடர்பு கொண்டு ஆவணங்களை சமர்பித்து பயன்பெற வேண்டும். இந்த தகவலை கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.


Next Story