கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
கிணத்துக்கடவு பகுதியில் கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
35 கல்குவாரிகள்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நெம்பர் 10 முத்தூர், சொக்கனூர், பொட்டையாண்டிபுறம்பு, வடபுதூர், அரசம்பாளையம், வடசித்தூர், காரச்சேரி, தேவராயபுரம் உள்ளிட்ட இடங்களில் 35 கல்குவாரிகள் உள்ளன. இதை நம்பி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இங்கிருந்து சைஸ் கல், போல்டர் கல், கல்லுகால், எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிக்கும், கேரளாவிற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் கல்குவாரிகளில் கனிமவளத்துறை அதிகாரிகள் கெடுபிடிகளை அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதன் காரணமாக கல்குவாரிகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளதால், கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு அபாயம் நிலவுகிறது.
லாரிகளுக்கு அபராதம்
இதுகுறித்து கல்குவாரி உரிமையாளர்கள் கூறியதாவது:-
தமிழ்நாடு கல்குவாரி சங்கம் சார்பில் எடுக்கப்பட்ட முடிவின்படி உற்பத்தியை நிறுத்தியுள்ளோம். குவாரிக்கு வரும் கனிமவளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து, அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டி எடுத்துள்ளதாக கூறி பல மடங்கு உயர்த்திய அபராதத்தை விதிக்கின்றனர். மேலும் கற்களை ஏற்றி செல்லும் லாரிகளை பிடித்து அதிக அபராதம் விதிக்கின்றனர்.
கல்குவாரி தொடங்கும்போது, உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், ெவளியூர் நபர்களின் எதிர்ப்பை நம்பி அனுமதி தர மறுக்கின்றனர். இதுபோன்ற கெடுபிடிகளால் தொழிலில் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே இடையூறு இன்றி தொழிலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.