ஈரோடு வந்த முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்
ஈரோட்டுக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.
ஈரோட்டுக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.
ஈரோட்டிற்கு வருகை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு நேற்று வந்தார்.
கோபி அருகே கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்த முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து ஈரோடு நோக்கி வந்தார். அப்போது பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஈரோட்டிற்கு இரவு 8.30 மணிக்கு வந்தார். அப்போது பி.பி.அக்ரஹாரம் பகுதியில் இருந்து அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. இரவு 9 மணி அளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதிக்கு வந்தார். அப்போது மழை கொட்டியது. எனினும் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மழையில் நனைந்தபடி முதல் -அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
மனுக்கள் பெற்றார்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் இருந்தபடி பொதுமக்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார். மேலும் முதல் -அமைச்சரை பார்க்க வந்த சிலர் கையில் மனு வைத்திருந்தனர். இதைப்பார்த்த முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை அழைத்து அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு காலிங்கராயன் விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அங்கு இரவில் ஓய்வெடுக்கும் முதல் -அமைச்சர், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு பெருந்துறை அருகே நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். விழாவில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து அவர் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசுகிறார். பின்னர் கோவை செல்லும் அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார்.