மனைவியிடம் டியூசனுக்கு வந்த10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; வியாபாரிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
மனைவியிடம் டியூசனுக்கு வந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது
ஈரோட்டில், மனைவியிடம் டியூசனுக்கு வந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
வியாபாரம்
ஈரோடு காளைமாடு சிலை பகுதியில் சில்லி கடை நடத்தி வந்தவர் சுபாஷ் (வயது 37). இவருடைய மனைவி பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு டியூசன் எடுத்து வந்தார். கடந்த 6-10-2022 அன்று இரவு 7 மணி அளவில் சுபாஷ் சில்லி கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவருடைய மனைவி பக்கத்து வீதியில் ஒரு வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்வதாகவும், வீட்டில் அவரது மகள்கள் மற்றும் டியூசனுக்கு வந்த குழந்தைகள் இருப்பதாகவும் கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.
வீட்டில் மனைவி இல்லாத நிலையில் சுபாஷ், சில்லி கடையை விட்டு உடனடியாக வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு குழந்தைகள் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தனர். அங்கிருந்த ஒரு சிறுவனை அழைத்து கடைக்கு செல்லும்படி கூறிய சுபாஷ், அவரது 3 மகள்களையும் அடுத்த வீதிக்கு சென்றிருந்த அம்மாவை பார்த்து, கடை வீதிக்கு செல்ல அனுமதி கேட்டு வரக்கூறி அனுப்பினார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
அவர்கள் வெளியே சென்றபிறகு, டியூசனுக்கு வந்த 10 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுமியிடம் அத்துமீறிய சுபாஷ், பாலியல் தொல்லை கொடுத்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்தார். அதனால் பயந்துபோன சிறுமி, அங்கிருந்து அழுதுகொண்டே ஓடிச்சென்று பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறினாள்.
இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர்கள் தெய்வராணி, நிர்மலாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் தைலா ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், சுபாஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
5 ஆண்டு சிறை
இதுதொடர்பாக போலீசார் ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி ஆர்.மாலதி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட சில்லி வியாபாரி சுபாசுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்ட நீதிபதி ஆர்.மாலதி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் எம்.ஜெயந்தி ஆஜராகி வாதாடினார்.