2,832 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,832 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,832 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.
தடுப்பூசி
இதுகுறித்து ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சுகாதாரத்துறையின் மூலம் நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 20,40,651 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியமானது. இதன் அடிப்படையில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் 1 லட்சம் முகாம்களை இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,832 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. எனவே, பொதுமக்கள் அனைவரும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணை தடுப்பூசிகளை இந்த மாபெரும் முகாமில் கலந்து கொண்டு செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மூன்றாம் தவணை ஊக்குவிப்பு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டிய இடைவெளி ஒன்பது மாதங்களில் இருந்து ஆறு மாதங்களாக குறைக்கப்பட்டு உள்ளது.
தனிமனித இடைவெளி
மேலும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் முன்களப் பணியாளர்களும் 3-ம் தவணை ஊக்குவிப்பு தடுப்பூசி செலுத்திக்கொள்ள இந்தமுகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. அனைவரும் முக கவசம், கை சுத்தம், தனிமனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்றி அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.