ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மண்குத்துதல், நீச்சல் பயிற்சி


ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மண்குத்துதல், நீச்சல் பயிற்சி
x

தைப் பொங்கல் விழா நெருங்கி வருவதையொட்டி ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு களத்தில் சீறிபாய்வதற்காக மானாமதுரை பகுதியில் காளைகளுக்கு மண்குத்துதல் மற்றும் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

சிவகங்கை

மானாமதுரை,

தைப் பொங்கல் விழா நெருங்கி வருவதையொட்டி ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு களத்தில் சீறிபாய்வதற்காக மானாமதுரை பகுதியில் காளைகளுக்கு மண்குத்துதல் மற்றும் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தயாராகும் காளைகள்

தை பிறந்தால் தென் மாவட்டங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் தொடங்கிவிடும். தை மாதம் நெருங்கி வருவதையொட்டி ஜல்லிக்கட்டு காளைகளும், அதை வளர்ப்போர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்து அதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கி உள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், சிங்கம்புணரி, மானாமதுரை, கல்லல், தேவகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஆண்டு முழுவதும் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் தை பொங்கல் விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் புகழ்பெற்ற சிராவயல், கண்டுப் பட்டி, அரளிப்பாறை, தேவபட்டு, கண்டரமாணிக்கம், இருமதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெறும்.

அதிலும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அடுத்தபடியாக மாட்டு பொங்கல் விழாவிற்கு மறுநாள் திருப்பத்தூர் அருகே சிராவயல் கிராமத்தில் நடைபெறும் மஞ்சுவிரட்டு மிகவும் புகழ் பெற்ற மஞ்சு விரட்டாகும். இந்த போட்டியில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும், நூற்றுக்கணக்கான காளைகளும் 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொட்டலில் இந்த போட்டி நடைபெறும்.

மண்குத்துதல், நீச்சல் பயிற்சி

அத்தகைய சிறப்பு வாய்ந்த போட்டிகளுக்காக தற்போது மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காளைகளுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மானாமதுரை அருகே கட்டிக்குளம் பகுதியில் தற்போது ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை காளை வளர்ப்போர் மற்றும் இளைஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் களத்தில் பங்கேற்கும் காளைகள் நீண்ட நேரம் நின்று விளையாடும் வகையில் நடை பயிற்சி, மண் குத்துதல் பயிற்சி, நீச்சல் பயிற்சி, பாய்ச்சல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்த மாடு வளர்ப்போர் சங்கரலிங்கம் கூறியதாவது:- தை மாதம் பிறந்தாலே தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். தற்போது நாங்கள் இந்த போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை தொடங்கி உள்ளோம். கட்டிக்குளம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காளைகள் உள்ளன. இந்த காளைகளுக்கு தினந்தோறும் பயிற்சிகளை அளித்து வருகிறோம்.

மஞ்சுவிரட்டு

இதுதவிர காளைகளுக்கு ஊட்டசத்து உணவாக பருத்திக் கொட்டை, கொண்டை கடலை, தூசி தவிடு, பேரீச்சை பழம் ஆகியவையும் வழங்கி வருகிறோம். சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் அன்று சிங்கம்புணரியிலும், மாட்டு பொங்கல் மறுதினம் சிராவயல் புதூரில் முதன் முதலில் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் இந்த காளைகள் பங்கேற்க உள்ளது.

கடந்த ஆண்டுபோல் இந்த ஆண்டும் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் எவ்வித தடையும் இன்றி நடைபெறும் என நம்புகிறோம். தை மாதம் பிறக்க உள்ளதையடுத்து காளைகளோடு நாங்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். ஏனெனில் எங்கள் வீட்டில் உள்ள பிள்ளைகளாக இந்த காளைகளை வளர்த்து வருகிறோம். இந்த காளைகள் போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் நின்று விளையாடும் போதும் எண்ணற்ற மகிழ்ச்சியை எங்களுக்கு தருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story