நாமக்கல்லில் வருகிற 25-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் படித்து வேலைவாய்ப்பின்றி உள்ளவர்களுக்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
வருகிற 25-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்டு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்புகளை பெறலாம்.
பணியாளர்களை தேர்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.