42 கிராம ஊராட்சிகளில் நாளை உழவர்களுக்கான முகாம்
42 கிராம ஊராட்சிகளில் உழவர்களுக்கான முகாம் நாளை நடக்கிறது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் கிராம ஊராட்சிகளில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் இந்த திட்டம் அரியலூர் மாவட்டத்தில் அணிக்குதிச்சான், அய்யூர், கொளத்தூர், பெரியாத்துக்குறிச்சி, விழுதுடையான், பெரிய கருக்கல், ஒட்டக்கோவில், கருப்பில்லாக்கட்டளை, சென்னிவனம், வெங்கடகிருஷ்ணாபுரம், கல்லங்குறிச்சி, அஸ்தினாபுரம், சிறுவளூர், கோமான், உட்கோட்டை, இளையபெருமாள்நல்லூர், தேவமங்கலம், வெத்தியார்வெட்டு, கழுவந்தோண்டி, பெரியவளையம், கழுமங்கலம், நாகமங்கலம், செந்துறை, பிலாக்குறிச்சி, நல்லாம்பாளையம், குமிழியம், வீராக்கண், உதயநத்தம், ஸ்ரீபுரந்தான், குணமங்கலம், காசான்கோட்டை, நடுவலூர், அணைக்குடம், கோடங்குடி, மணகெதி, வெற்றியூர், வாரணவாசி, திருமழப்பாடி, வெங்கனூர், மலத்தான்குளம், செம்பியக்குடி மற்றும் விழுப்பணங்குறிச்சி ஆகிய 42 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் அந்த கிராமங்களில் உழவர்களுக்கான முகாம் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த முகாமில் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடிக்கான தொழில்நுட்ப ஆலோசனைகள், விதை நேர்த்தி, ஒருங்கிணைந்த உர நிர்வாகம், ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம், திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்குதல், உழவன் செயலியை விவசாயிகளின் செல்போனில் பதிவிறக்கம் செய்து இடுபொருள் தேவையை பதிவு செய்தல், பயிர் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெறுதல், பி.எம். கிசான் திட்டத்தில் புதிய நபர்களை இணைத்தல், ஏரி மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுத்து செல்ல அனுமதி கோரும் விண்ணப்பங்களை பெறுதல், கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் மற்றும் குடற்புழு நீக்கம் போன்ற சேவைகள் மட்டுமல்லாது, இத்திட்டத்தில் ஒப்பளிப்பு செய்யப்பட்ட இடுபொருட்கள் மானிய விலையில் வினியோகம் செய்யப்பட உள்ளது. முகாமில் வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
எனவே, தேர்வு செய்யப்பட்ட 42 கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை- உழவர் நலத்துறையின் களப்பணியாளர்களை தொடர்பு கொள்ளலாம்.