முகாம் பொறுப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்


முகாம் பொறுப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்
x

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்த பொறுப்பு முகாம் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.

திருப்பூர்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்த பொறுப்பு முகாம் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.

கலைஞர் மகளிர் உரிமை திட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்துவது குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது. ஒவ்வொரு விண்ணப்ப பதிவு முகாமின் பொறுப்பு அலுவலராக ஒரு அரசு அலுவலர் நியமனம் செய்யப்பட வேண்டும். கிராம பகுதிகளில் கிராம நிர்வாக அதிகாரி, கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர், மக்கள் நலப்பணியாளர் ஆகியோர் முகாம் பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட வேண்டும். போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லையென்றால் வேறு துறைகளில் பணிபுரியும் அலுவலர்களையும் முகாம் பொறுப்பு அலுவலராக நியமனம் செய்ய வேண்டும்.

முகாம் பொறுப்பு அலுவலர்கள்

மேலும் தாசில்தார், தாலுகா அளவிலான முகாம் பொறுப்பு அலுவலர்கள், விண்ணப்பம் வழங்கும் அலுவலர்கள், விண்ணப்ப பதிவு தன்னார்வலர்கள் மற்றும் உதவி மைய தன்னார்வலர்களுக்கு ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு முகாம் பொறுப்பு அலுவலர் மற்றும் தன்னார்வலர்களை அறிமுகம் செய்வதும், அவர்களுக்குள் தகவல் தொடர்பு ஏற்படுத்துவதும் மிகவும் அவசியம்.விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்த பயிற்சியை தன்னார்வலர்களுக்கு அளிக்க வேண்டும். வருவாய் ஆய்வாளர்கள், துணை தாசில்தார்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதாரஆய்வாளர்கள் ஆகியோர் மண்டல அலுவலர்களாக நியமனம் செய்ய வேண்டும். ஒரு மண்டல அலுவலருக்கு ஒருநாளைக்கு 5 முகாம்களுக்கு பணி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். தேவையான விண்ணப்பங்கள், எழுதுபொருட்கள் ஆகியவற்றை முகாம் நடைபெறுவதற்கு 3 நாட்கள் முன்கூட்டியே ரேஷன் கடைகளுக்கு மண்டல அலுவலர்கள் அளிக்க வேண்டும். கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் சரி செய்ய வேண்டும். தாசில்தார் சமூக பாதுகாப்பு திட்டம், தனிதாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், கூட்டுறவு சார்பதிவாளர்கள் போன்ற வட்டார, வட்டநிலை அலுவலர்களை மேற்பார்வை அலுவலர்களாக நியமனம் செய்ய வேண்டும்.

மேற்பாா்வை அலுவலர்

ஒவ்வொரு மேற்பார்வை அலுவலரும் ஒருநாளைக்கு 15 முகாம்களை பார்வையிட வேண்டும். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் வரி வசூலிப்பவர், கிராம நிர்வாக அதிகாரி, சுகாதார ஆய்வாளர், சுகாதார அலுவலர் மற்றும் நகராட்சி பணியாளர்களை முகாம் பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்ய வேண்டும். ரேஷன் கடை பணியாளர்கள் உரிய நேரத்தில் விண்ணப்பம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன், உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story