வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் முகாம்
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம் நடைபெற்றது.
வாக்காளர் பட்டியல்
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதா? என்பதை கண்டறிவதற்காகவும், நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணினை இணைக்க அனுமதி வழங்கியுள்ளது.
அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணினை வழங்குவதற்காக படிவம் 6-பி என்ற புதிய படிவம் தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதார் எண் இணைப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் எண் இணைக்கும் பணியானது கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணியினை விரைவுபடுத்துவதற்காகவும், வாக்காளர்களின் வசதிக்காகவும் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி நேற்று சிறப்பு முகாம்கள் காலை முதல் மாலை வரை நடைபெற்றன.
முகாமில் வாக்காளர்கள் தாமாக முன்வந்து 6-பி படிவத்தை பெற்று தங்களது ஆதார் எண்ணினை பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் நேரடியாக தாக்கல் செய்து வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து கொண்டனர்.