உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட பிரசார வாகனங்கள்


உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட பிரசார வாகனங்கள்
x

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் குறித்த பிரசார வாகனங்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்.

நாமக்கல்

பிரசார வாகனங்கள்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டம் (ஊட்டமிகு சிறுதானியங்கள்) குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்ட விளக்க பிரசார வாகனங்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் சிறுதானியங்கள் சராசரியாக 80 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த காலங்களை ஒப்பிடுகையில் சிறுதானியங்களில் வெளியிடப்பட்ட புதிய உயர் விளைச்சல் ரகங்களினாலும், தொழில்நுட்ப உத்திகளினாலும், தமிழக அரசின் பல்வேறு திட்டங்களினாலும் பயிரின் உற்பத்தி திறன் வெகுவாக உயர்ந்து உள்ளது.

2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்து உள்ளது. சிறுதானியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் திட்ட செயலாக்கம் பற்றி அந்தந்த பகுதி விவசாயிகளை சென்றடையும் வகையில் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

50 சதவீத மானியம்

அதன் அடிப்படையில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் விதை வினியோகம் (உயர் விளைச்சல் தரும் விதை ரகங்கள்), செயல்விளக்கத்திடல் அமைத்தல், உயிர் உரம் வினியோகம், பயிர்பாதுகாப்பு மருந்து மற்றும் உயிரியல் காரணிகள் வினியோகம், கைத்தெளிப்பான் வினியோகம் போன்ற இனங்களில் 50 சதவீத மானியத்தில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் 40 திட்ட விளக்க வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து புதிய வேளாண்மை காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை துணை இயக்குனர் ராஜகோபால், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story