பழுதடைந்த தகன மேடை புதுப்பிக்கப்படுமா?
சரவணம்பட்டி மின் மயானத்தில் பழுதடைந்த தகன மேடை புதுப்பிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
சரவணம்பட்டி,
சரவணம்பட்டி மின் மயானத்தில் பழுதடைந்த தகன மேடை புதுப்பிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
மின் மயானம்
கோவை சரவணம்பட்டி பகுதியில் மின் மயானம் உள்ளது. இந்த மின் மயானம் தனியார் நிறுவன அறக்கட்டளையின் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, சின்னவேடம்பட்டி, உடையாம்பாளையம், எல்.ஜி.பி. நகர், அத்திப்பாளையம் பிரிவு, கணபதி, கரட்டு மேடு, குரும்பபாளையம், கோவில்பாளையம், வெள்ளக்கிணறு ஆகிய பகுதிகளை சேர்ந்த இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டு வருகிறது.
இதற்காக மின் மயானத்தில் 2 மின் தகன மேடைகள் உள்ளன. ஆனால், ஒரு மின் தகன மேடை மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக அந்த மின்தகன மேடையும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக சரவணம்பட்டி மின் மயானம் செயல்படாமல் உள்ளது.
பொதுமக்கள் பாதிப்பு
இதன் காரணமாக சரவணம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு, சம்பந்தப்பட்ட உறவினர்கள் முன்பதிவு செய்வதற்காக மின் மயானத்திற்கு சென்று கேட்கும் போது, மின் மயானத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது எனவும், ஆகவே வேறு மின் மயானத்திற்கு செல்லுங்கள் என்று கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
ஆனால், வேறு மின் மயானத்திற்கு சென்றாலும், இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
புதுப்பிக்க வேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சரவணம்பட்டி மின் மயானத்தில் 2 மின்தகன மேடைகளும் செயல்படாமல் உள்ளது. இதனால் வேறு மின் மயானத்துக்கு இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, கோவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, சரவணம்பட்டி மின் மயானத்தில் 2 மின்தகன மேடைகளையும் புதுப்பித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.
இதுகுறித்து சரவணம்பட்டி மின் மயான ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது, கடந்த ஒரு வாரமாக பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. பணிகள் நிறைவடைய இன்னும் 5 நாட்கள் ஆகும் என்றார்.