சசிகலா தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி விசாரிக்க முடியுமா? - ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு


சசிகலா தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி விசாரிக்க முடியுமா? - ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 2 Dec 2022 4:30 AM IST (Updated: 2 Dec 2022 8:56 AM IST)
t-max-icont-min-icon

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி விசாரிக்க முடியுமா? என்பது குறித்த தீர்ப்பை ஐகோர்ட்டு தள்ளிவைத்தது.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி, சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி சார்பில் தனித்தனியாக அப்போது பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை ஏற்ற சிட்டி சிவில் கோர்ட்டு, வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி, அவரது வழக்கை நிராகரித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சசிகலா தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அ.தி.மு.க. சார்பில் மூத்த வக்கீல்கள் விஜய் நாராயண், எஸ்.ஆர்.ராஜகோபால் ஆகியோர் ஆஜராகி, 'ஐகோர்ட்டு வகுத்துள்ள விதிகளின் படி இந்த வழக்கை தனி நீதிபதி விசாரிக்க முடியாது. 2 நீதிபதிகள் கொண்ட அமர்வுதான் விசாரிக்க முடியும்' என்று வாதிட்டனர்.

சசிகலா தரப்பில் மூத்த வக்கீல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, 'ஐகோர்ட்டு பதிவுத்துறையில் விதிகளை சரிபார்த்த பின்னர்தான் வழக்கு தொடர்ந்துள்ளோம். அதனால் தனி நீதிபதியே இந்த வழக்கை விசாரிக்கலாம்' என வாதிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கு தனி நீதிபதி விசாரிக்க முடியுமா? என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.


Next Story