ஆபத்தான நிலையில் காணப்படும் மின்மாற்றி அகற்றப்படுமா?


ஆபத்தான நிலையில் காணப்படும் மின்மாற்றி அகற்றப்படுமா?
x
தினத்தந்தி 2 Sept 2023 12:15 AM IST (Updated: 2 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே ஆபத்தான நிலையில் காணப்படும் மின்மாற்றி அகற்றப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே ஆபத்தான நிலையில் காணப்படும் மின்மாற்றி அகற்றப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சேதமடைந்த மின்மாற்றி

கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் மின்மாற்றி அமைந்துள்ளது. இந்த மின்மாற்றி மூலம் அப்பகுதியில் உள்ள சுமார் 1,500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த மின்மாற்றி தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. அதில் உள்ள இரண்டு மின் கம்பங்களும் பழுதடைந்து முறிந்து விழும் நிலையில் இருந்து வருகிறது. மின்கம்பங்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.

அச்சத்துடன் சென்று வருகின்றனர்

இந்த மின்மாற்றி எந்த நேரமும் முறிந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது.காற்று சற்று பலமாக வீசினால் கூட மின்மாற்றி முறிந்து விழுந்து பெரும் ஆபத்து ஏற்படும் நிலை இருந்து வருகிறது. இதனால் இந்த மின்மாற்றியை கடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

ஆச்சாள்புரத்தில் சிறப்பு வாய்ந்ததாக உள்ள அங்காளம்மன் கோவில் வாசல் முன்பு இந்த மின்மாற்றி அமைந்துள்ளது. கோவிலுக்கு தினந்தோறும் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். மின்மாற்றியின் அருகில் அரசு மேல்நிலைப்பள்ளியும், பஸ் நிறுத்தமும் உள்ளன. அதிக மக்கள் நடமாட்டமும் உள்ள பகுதியில் முறிந்து விழும் நிலையில் மின்மாற்றி அமைந்துள்ளது.

புதிதாக அமைத்துத்தர வேண்டும்

மேலும் இந்த மின்மாற்றிக்கு மிக அருகிலேயே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சிவலோக தியாகராஜ சுவாமி கோவிலும் அமைந்துள்ளது.இந்த மின்மாற்றியை அகற்றிவிட்டு வேறு இடத்தில் புதிதக மின்மாற்றி அமைக்க வேண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றியை அகற்றி விட்டு வேறு இடத்தில் புதிதாக அமைக்க வேண்டும் என ஆச்சாள்புரம் கிராமமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story